COVID-19 நோய் பரவுவதனைத் தடுப்பதற்காக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளில் ஒன்றான முகக்கவசம் அணிவது தொடர்பான ஒரு தெளிவூட்டல்.
எமது நாட்டில் சமூக மட்டத்தில் இதன் பரவுகை கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும், உலக நாடுகளில் இன்னும் இந்நோய் பரவுவதுடன், எமது நாட்டவர்கள் கட்டம் கட்டமாக அழைத்துவரப்படுகின்றார்கள். இவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி PCR பரிசோதனையும் செய்த பின்னரே விடுவிக்கப்படுகின்றார்கள்.
இந்த பின்னணியில், இன்னும் ஆபத்து முற்றாக நீங்கிவிடவில்லை என்ற உண்மையின் அடிப்படையில், நாங்கள் இந்நோயிலிருந்து எம்மைப் பாதுகாப்பதற்காக கொரோனாவோடு வாழவேண்டிய சூழ்நிலை. அதற்காக எமது நாளாந்த வாழ்க்கை முறைகளில் விரும்பியோ விரும்பாமலோ சில நடைமுறைகளை பின்பற்றியாக வேண்டும். அவற்றில் ஒன்று தான் முகக்கவசம் அணிவது.
முகக்கவசம் யார் எப்போது எவ்வாறு அணிவது என்பது பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.
முகக்கவசம் கட்டாயமாக யார் அணிய வேண்டும்?
- வீட்டைவிட்டு வெளியே செல்லும்;
- 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
- நாட்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்.
- காய்ச்சல், தடிமன், இருமல் போன்ற நோய் அறிகுறி இருப்பவர்கள்.
- பொது இடங்கள் அல்லது மக்கள் ஒன்று சேரும் இடங்களில் கலந்துகொள்பவர்கள்.
- வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள்.
- COVID-19 நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தலை முடித்தவர்கள்.
- COVID-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களோடு நேரடித் தொடர்புடையவர்கள்.
- கர்ப்பிணித்தாய்மார்கள்.
- இவர்களுக்கு மேலதிகமாக;
- பொதுமக்கள் பலரும் வந்துபோகக்கூடிய இடங்களில் வேலை செய்பவர்கள்.
- பொதுப் போக்குவரத்து வாகனங்களின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள்.
- வீடு வீடாகச் சென்று அளவீடுகளை எடுக்கும் மின்சார மற்றும் நீர் வழங்கல் சபை போன்றவற்றில் கடமையாற்றுபவர்கள்.
- ஹோட்டல்கள், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் வேலை செய்பவர்கள்.
- முடிவெட்டுபவர்கள்
- தபால் ஊழியர்கள்.
முகக்கவசம் அணிவது கொரோனா வைரஸ் மூக்கு, வாயினுள் நேரடியாக செல்வதனைத் தடுப்பதற்காக என்பதனை விட, கழுவப்படாத தமது கைகளினால் மூக்கு, வாயைத் தொட்டுவிடக்கூடாது என்பதற்காகவும், சமூக இடைவெளியைப் பேண முடியாமல் முன்னாலிருப்பவர் தும்மும் போதும் இருமும் போதும் நேரடியாக சளித்துணிக்கைகள் விசிறப்பட்டுவிடாமலும் தடுப்பதற்காகவே என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆயினும், வீட்டிலிருக்கும் போதும், தமது சொந்த வாகனங்களில் பயணிக்கும் போதும், தனியாக வேலை செய்யும் போதும் முக்க்கவசம் அணிய வேண்டும் என்ற கண்டிப்பில்லை. அணிந்தால் தவறுமில்லை.
.....
வைத்திய கலாநிதி நாகூர் ஆரிப்,
பிராந்திய தொற்று நோய் தடுப்பியலாளர்,
கல்முனை.
No comments:
Post a Comment