பழம்பெரும் தமிழ்த்தேசியப்பற்றாளர் 'திராவிடத்தம்பி' என செல்லமாக அழைக்கப்படும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர் வேலுப்பிள்ளை சின்னத்தம்பி ஜயாவின் இழப்பு தமிழ்த்தேசியத்திற்கு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ள பேரிழப்பாகும்.
இவ்வாறு இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்றஉறுப்பினருமான மாவை சோ சேனாதிராஜா மல்வத்தையில் நினைவுரையாற்றுகையில் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தின் மல்வத்தையில் தமிழ்த்தேசியத்தின் கொள்கைவாதியாக வாழ்ந்து தனது 81ஆவது வயதில் மரணித்த 'திராவிடத்தம்பி' என அழைக்கப்படும் வேலுப்பிள்ளை சின்னத்தம்பியின் 40வது தினநினைவு தினநிகழ்வில உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் ஏற்பாட்டில் நேற்றுமுன்தினம் இந்நிகழ்வு நடைபெற்றது.
முன்னதாக அன்னாரது திருவுருவப்படத்திற்கு திரு மாவைசேனாதிராஜா மலர்மாலை அணிவித்து ஈகைச்சுடரேற்றி அன்னாரது துணைவியார் மற்றும் பிள்ளைகளுக்கு ஆறுதல் தெரிவித்து அனுதாப உரை நிகழ்த்தினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்:
எமது கட்சியின் அம்பாறை மாவட்ட முதுபெரும் தூண் இன்று இல்லை.. அவரது கொள்கையின்பாலான வெறித்தனம் இன்றும் வேட்பாளர் கணேஸ் போன்ற இளம் சந்ததியினருக்கு முன்னுதாரணமாகவிருக்கும். அவரது ஊனுடம்பு அழிந்தாலும் புகழுடம்பு அழியாது. அவர் என்றும் தமிழ்மக்கள் மத்தியில் சிரஞ்சீவியாக எம்முடன் வாழ்ந்துகொண்டேயிருப்பார்.
தந்தை செல்வா காலத்தில் இருந்து அம்பாறை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் வளர்ச்சிக்கு கொள்கைப்பிடிப்புடன் அரும்பணியாற்றியவர் அமரத்துவமடைந்த வேலுப்பிள்ளை சின்னத்தம்பி ஐயா.
தமிழ் மக்களின் விடிவுக்காக தந்தை செல்வநாயகம் 1949 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தார். தந்தையின் பாசறையில் தந்தையோடு கூடவே வாழ்ந்து அம்பாறையில் ஒரிஜினல் தமிழரசுக் காரனாக வாழ்ந்தவர் வேலுப்பிள்ளை சின்னத்தம்பி. – அஹிம்சை ரீதியில் தந்தை செல்வநாயகம் அவர்கள் பல போராட்டங்களை முன்னெடுத்தபோது அவரோடு கூடவே போராட்டத்தில் பங்குகொண்டு எமது மண்ணுக்குப் பெருமை சேர்த்தவர் வேலுப்பிள்ளை சின்னத்தம்பி அவர்கள்.
அவர் தமது 07 பிள்ளைகளுக்கும் வைத்துள்ள பெயர்கள் தமிழ்செல்வி கலைச்செல்வி மணிமேகலை இனியபாரதி அண்ணாதுரை கண்ணதாசன் அகிலன் அவரது தமிழ்ப்பற்றுக்கு சாட்சியமாக விளங்குகின்றன. என்றார்.
அன்னாரது மறைவுச்செய்தி கேட்டவுடன் இலங்கைத்தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உடனடியாக தொலைபேசி மூலம் கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர் கே.ஜெயசிறிலைத் தொடர்புகொண்டு கட்சி சார்பாகக்கலந்துகொண்டு கட்சிக்கொடியைப்போர்த்தி தமது அனுதாபங்களைத் தெரிவித்து அஞ்சலி செலுத்துமாறு கேட்டிருந்தமையும் கட்சி சார்பாக குடும்பத்தினருக்கு அனுதாபமும் தெரிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தகக்து.
No comments:
Post a Comment