கல்முனையின் ஆள்புல எல்லைக்குள் இடம்பெறும் அத்துமீறல்களுக்கு விரைவில் தீர்வு காண குழு அமைப்பு - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Monday, June 8, 2020

கல்முனையின் ஆள்புல எல்லைக்குள் இடம்பெறும் அத்துமீறல்களுக்கு விரைவில் தீர்வு காண குழு அமைப்பு



கல்முனை மாநகர சபையின் ஆள்புல எல்லைக்குள் அண்மைக்காலமாக  இடம்பெற்று வருகின்ற அத்துமீறல் செயற்பாடுகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க  சுயாதீன குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது.

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் கல்முனை மாநகர சபையின் கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை(7) முற்பகல் 11  மணிக்கு அண்மைக்காலமாக கல்முனை மாநகர சபையின்  கீழ் உள்ள பகுதிகளில் நிலவும் எல்லைப்பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று  இடம்பெற்ற வேளை மேற்படி தீர்வு எட்டப்பட்டது.

 அண்மையில் பெரிய நீலாவணைப் பகுதியில் இடம்பெற்ற சம்பவம்  தொடர்பில் குறித்த கலந்துரையாடலில் தீவிரமாக ஆராயப்பட்டதுடன்  மாநகர  முதல்வர் அழைப்பில் முன்னாள் அம்பாறை மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் கல்முனை  வடக்கு பிரதேச  செயலாளர் ரி.ஜே அதிசயராஜ் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் ஆலய பரிபாலன சபையினர் ஊர்பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


இதன் போது இக்கலந்துரையாடலில் கல்முனை மாநகர சபையின் ஆள்புல எல்லைக்குள் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையினர்  ஊடுருவி எமக்குரிய சில இடங்களில் அவர்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக எமது மாநகர சபை கடந்த காலங்களில்  நடவடிக்கை  மேற்கொண்டிருந்தது  என முதல்வர் கலந்துரையாடலின் ஆரம்பத்தில்  குறிப்பிட்டார்.

எனவே  அதன்படி இவ்எல்லை பிரச்சினைக்கு தீர்வு காண  இரு  மாவட்ட அரசாங்க அதிபர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட இரு தரப்பு பேச்சுவார்த்தை ஒன்றுக்கான ஒழுங்கு செய்தால் தான் இப்பிரச்சினைக்கு நிரந்திர தீர்வு ஒன்றினை எட்டமுடியும் என குறிப்பிட்ட நிலையில் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட அனைத்து தரப்பினரும் தத்தமது கருத்துக்களை முதல்வரின் கருத்திற்கு ஆதரவாக  ஒருமித்து தெரிவித்தனர்.

இதற்கமைய எதிர்காலத்தில் இவ்வெல்லை பிரச்சினையை தீர்ப்பதற்காக ஒரு சுயாதீன குழு ஒன்றினை அமைப்பது எனவும் இக்குழுவின் ஊடாக இவ்விரு மாவட்ட அரசாங்க அதிபர்களையும் சந்தித்து கலந்துரையாடி தீர்வு ஒன்றினை பெற்றுக்கொள்வது என முடிவு எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும் கடந்த காலங்களில் இவ்வாறான எல்லைப்பிரச்சினையில்  தவறான செய்திகள் வெளியாகியதுடன்  மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பெரிய கல்லாறு பகுதிக்குள் அத்துமீறி குப்பைகளை கொட்டுவதாகவும் அவை தடுக்கப்பட்டதால் நாம் அங்கு சென்று அவர்களை அச்சுறுத்தியதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. எமது ஆள்புல எல்லைக்குள் அத்துமீறல்களில் ஈடுபட்டவர்களே எம்மீது இவ்வாறான  குற்றஞ்சாட்டுகளை முன்வைத்ததை மாநகர முதல்வர் இக்கலந்துரையாடலில் ஞாபகமூட்டினார்.

 அத்துடன்  அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களினதும் கல்முனை மாநகர சபை மற்றும் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையினதும் எல்லையே கார்ட் ரோட் வீதியாகும். இப்பாதையின் வடக்கு பகுதியானது மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையின் பெரிய கல்லாறு கிராமமாகும். இதன் தெற்கு பகுதியில் கல்முனை மாநகர சபையின் பெரிய நீலாவணை கிராமம் அமைந்துள்ளது.

1961 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டபோது வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் இவ்வீதியே எல்லையாக குறிப்பிடப்பட்டுள்ளது. அது போன்று கல்முனை வடக்கு கிராமாட்சி மன்றத்தினதும் கல்முனைத் தொகுதியினதும் வடக்கு எல்லையாகவும் இவ்வீதியே குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் கல்முனை பிரதேச சபை உருவாக்கப்பட்டபோதும் அது நகர சபையாக மாநகர சபையாக தரமுயர்த்தப்பட்டபோதும் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்களில் இந்த எல்லை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

1971ஆம் ஆண்டு இது போன்றதோர் பிரச்சினை ஏற்பட்டபோது கல்முனை வடக்கு கிராமாட்சி மன்றத்தின் தலைவராக இருந்த செனட்டர் மஷூர் மௌலானா  இரு மாவட்டங்களினதும் அரசாங்க அதிபர்களை அழைத்து நடத்திய இரு தரப்பு சமரசக் கூட்டத்திலும் வர்த்தமானியின்படி இவ்வீதியே எல்லை என்று இணக்கம் காணப்பட்டிருக்கிறது.

எனினும் சம்பவ இடத்தில் இந்த வர்த்தமானி பத்திரிகைகளை காண்பித்து தெளிவுபடுத்திய போதிலும் அவற்றை ஏற்றுக்கொள்ள சம்பந்தப்பட்டவர்கள் தயாராக இல்லை.இதனைத் தொடர்ந்து கல்முனைப் பொலிஸில் முறைப்பாடுகளை பதிவு செய்து விட்டு  அன்றைய தினமே நான் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து இப்பிரச்சினை தொடர்பில் எடுத்துரைத்ததுடன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த முரண்பாட்டை அவசரமாக தீர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாகவும்  இரு அரசாங்க அதிபர்களையும் கூட்டம் ஒன்றுக்கு அழைத்து விரைவில் அவர்கள் இருவரினதும் பிரசன்னத்துடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற இருந்த நிலையில் முன்னாள் மட்டக்களப்பு  அரசாங்க அதிபர் ஒத்துழைப்பு வழங்க முன்வரவில்லை என்பதை இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.இது விடயத்தில் தற்போது முன்னெடுக்கவுள்ள அனைத்து நடவடிக்கைகளுக்கும்    முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட  பலரும் சம்பவம் தொடர்பில் கண்டனம் தெரிவித்து உரையாற்றியதுடன்  சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் எமது எல்லையை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதுடன் இவ்விடயத்தில் முதல்வர் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் எனவும் குறிப்பிட்டனர்.

குறித்த எல்லை இவ்விரு மாவட்டங்களுக்கும் இடையே நீண்ட காலமாகவே இருக்க இடமளிக்க முடியாது.தற்போது இக்கலந்துரையாடலில் நாம் ஒவ்வொருவரும் எடுத்துள்ள தீர்மானத்தை சுயாதீனமாக கொண்டு சென்று இப்பிரச்சினைக்கு சுமூகமான  தீர்வு காண வேண்டும்.இதற்கு எமது ஒத்துழைப்பு என்றும் இருக்கும் என இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு முன்னாள் அம்பாறை பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.















...
சந்திரன் குமணன்
அம்பாறை.


No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.