New Diamond மசகு எண்ணெய் கப்பலில் நேற்று (07) மீண்டும் பரவிய தீ, இதுவரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை என கடற்படை தெரிவித்துள்ளது.
தீயை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்படுவதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கப்பல் 27 கடல் மைல் தொலைவிலுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தீ ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், தொடர்ந்தும் தீயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
தீ விபத்து ஏற்பட்ட New Diamond கப்பலினால், சமுத்தரத்திற்கு ஏதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இதற்காக 7 பேர் கொண்ட குழு இன்று அதிகாலை 4.50 மணியளவில் குறித்த பகுதிக்கு புறப்பட்டுச் சென்றது.
ருகுணு பல்கலைக்கழகத்தின் சமுத்திர விஞ்ஞான பிரிவின் நிபுணர்கள் இருவரும் கடல் மாசுறலைத் தடுக்கும் பாதுகாப்பு அதிகார சபையின் நிபுணர்கள் இருவரும் நாரா நிறுவனத்தை சேர்ந்த நிபுணர்களும் இந்த குழுவில் அடங்குகின்றனர்.
இன்று முற்பகல் 10.30 மணியளவில், New Diamond கப்பலை அண்மித்த குறித்த குழுவினர் பரிசோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.இதேவேளை, கப்பலிலிருந்து எண்ணெய் கசியும் பட்சத்தில் அது தொடர்பில் இன்று கலந்துரையாடப்படவுள்ளது.
கடற்படையினர், விமானப்படையினர், இடர் முகாமைத்துவ திணைக்களம், கடற்றொழில் திணைக்களம் உள்ளிட்ட 15 நிறுவனங்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்பதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment