கடந்த ஒரு வாரகாலமாக இலங்கையில் மட்டுமல்ல சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்த சம்பவமாக அம்பாறையில் தீப்பற்றிஎரியும் கப்பல் விவகாரம் அமைந்திருந்தது.
கடந்த 3ஆம் திகதி காலை சங்குமண்கண்டி கடற்பரப்பில் கப்பல் தீப்பற்றி எரிகிறது என்ற செய்தி காட்டுத்தீ போல் மிகவேகமாக பரவியது. அந்தச்செய்திக்கு இன்றோடு வயது ஒருவாரமாகின்றது. எனினும் இன்னும் விவகாரம் தீர்ந்துவிடவில்லை. வரவர அச்சம் அதிகரிக்கிறது.
அன்றிலிருந்து கடந்த ஒருவார காலத்துள் அக்கப்பல் இருதடவைகள் தீப்பற்றி எரிந்திருக்கிறது. இன்னுமொருதடவை தீப்பற்றுமாகவிருந்தால்கப்பல் வெடித்துச் சிதறலாம். அப்படி வெடித்துச்சிதறினால் முழு இலங்கைக்கும் பாதிப்பாக அமையலாமென கூறப்படுகிறது. இதனால் மக்கள் குறிப்பாக அம்பாறை கரையோரமக்கள் பயபீதியுடன் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இறுதியாக கிடைத்த தகவலின்படி கப்பலைச்சுற்றி 1கிலோமீற்றர் தூர பிரதேசங்களில் கறுப்புநிற டீசல் படிந்த தட்டுக்கள் அவதானிக்கப்பட்டுள்ளது.அதனை விமானப்படை உறுதிசெய்துள்ளது.
கப்பலின்பிற்புறத்தில் தீயணைப்பிற்காக தங்கியிருப்போரின் பாவனையால் கப்பலின் பாவனைக்கென சேமிக்கப்பட்டிருந்த டீசல் கடலில் சிந்தியிருக்கலாமென நம்பப்படுகிறது.
இவை கரையை அடையும்போது மீனவர்களுக்கு பாரியபிரச்சினையை கொடுக்கலாம்.அத்துடன் கடற்சூழலுக்கும் அச்சுறுத்தலாகவிருக்கும்.
எனினும் பிரதான தாங்கியிலுள்ள மசகெண்nணைய் மற்றும் டீசல் என்பன இன்னும் கசியவில்லையென நம்பகமாகத் தெரிகிறது. அது மக்களுக்கு ஒரளவு ஆறுதலைத்தருகிறதெனலாம்.
மத்தளவிமான நிலையத்தில் தங்கியுள்ள இந்திய விமானமொன்று கடலில் டீசல் அல்லது மசகெண்ணெய் கசிந்துள்ளதா? என்பது தொடர்பில் ஆய்வுசெய்ய தயாராகியுள்ளது.
எண்ணெய் கசிந்தால் அல்லது கப்பல் முழுதாக முழ்கினால் பாரிய சுற்றுச்சூழல் ஆபத்தை இப்பிராந்தியம் எதிர்நோக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒருவேளை கப்பல்பிளவுபட்டு உடையும் நிலை ஏற்பட்டால் இந்திய கடல்பிரதேசம் பாரிய அச்சுறுத்தலைச் சந்திக்கும்.
கப்பலின்தீ ஒருவேளை எரிபொருள்கிடங்கிற்கு பரவி கப்பல் வெடிக்குமாயின் அதனாலேற்படும் சேதத்தை சீர்செய்ய 25முதல் 30ஆண்டுகள் ஆகலாமென கடல்சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்திருக்கிறது.
இரண்டு தடவைகள் சுவாலை விட்டு தீ பற்றியதை ஊடகங்களில் கண்டிருக்கலாம். அதனை அணைப்பதற்கு இலங்கை இந்திய நாட்டு கடற்படையினர் விமானப்படையினர் மேற்கொண்ட பகீரதப்பிரயத்தனத்தை பார்த்திருப்பீர்கள். ஜனாதிபதி அவர்களை உரியதருணத்தில் பாராட்டத்தவறவில்லை.
தீ பரிபூரணமாக அணைக்கப்படும்பட்சத்தில் இதனை ஏதாவது அருகிலிருக்கக்கூடிய துறைமுகத்திற்கு இழுத்துச்செல்ல இரண்டு இழுவைக்கப்பல்கள் தயாராகஇருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஏஎல்பி விங்கர் என்ற சிறப்பு இழுவைக்கப்பல் ஏலவே தீக்கப்பலை ஒருதிசைக்கு இழுத்துச்சென்று விட்டது. எனினும் காற்றின்வேகம் பலமான நீரோட்டத்தின்காரணமாக மீண்டும் அது சங்குமண்கண்டி கடற்பிரதேசத்துள் வந்துள்ளது. இதனை சர்வதேசகடற்பரப்பிற்கு நகர்த்துவதற்கான நடவடிக்கையை நிதானமாக மேற்கொண்டுவருகின்றனர்.
சம்பவம்.
சங்குமண்கண்டி என்பது இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தனித்தமிழர்வாழும் கிராமமாகும். சுற்றவர தமிழ்க்கிராமங்களால் சூழப்பட்ட அக்கிராமத்தின் கிழக்குத்திசையில் வங்காளவிரிகுடாக்கடல் ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கிறது.
அந்தக்கடலின் 38கடல்மைல் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த எரிபொருள்தாங்கிக்கப்பலொன்று செப்.3ஆம் திகதி வியாழக்கிழமை காலை 8மணியளவில் திடிரென தீப்பற்றிக்கொண்டது.
"எம்ரி நியு டயமன்ட் " எனப்பெயரிடப்பட்ட இக்கப்பல் பனாமாநாட்டுக்கொடியுடன் குவைத் நாட்டின் மீமினா அல்ஹைதி துறைமுகத்திலிருந்து மசகெண்ணையையும் டீசலையும் ஏற்றிக்கொண்டு இந்திய ஒடிசாமாநில பாரதீப் துறைமுகத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தது.
உலகின் நீளமான எரிபொருள்தாங்கிக்கப்பல்களில் ஒன்றான 330அடி நீளமான இக்கப்பல் கிரேக்கநாட்டின் பெரும்வணிகருக்குச் சொந்தமானது. இதில் 23மாலுமிகள் பயணித்துள்ளனர். இவர்களில் ஒருவரைத்தவிர ஏனைய 22பேரும் இலங்கைக்கடற்படையினரால் துணிகரமாகக் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இது வெறும் பயணிகள் கப்பல் என்றால் பயணிகளைக் காப்பாற்றுவதோடு பிரச்சினை முடிந்திருக்கும். ஆனால் 2லட்சத்து 70ஆயிரம் மெட்ரிக்தொன் மசகெண்ணெய் அல்லது கச்சாஎண்ணெயுடன் டீசலுடன் இது தீப்பற்றிக்கொண்டதுதான் இங்கு பிரச்சினை.
மசகெண்ணெய் இயல்பாக நீரில் கரையாத தன்மை கொண்டது. அது நீரின்மேல் ஓர அடர்த்திபடலத்தை உருவாக்கும்.அது உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியது. சுவாசக்கோளாறு தொடக்கம் சரும புற்று நோய்கள் போன்ற பலவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. இப்படிவுகள் கரையை அடைந்தால் மீனினங்களுக்கு மட்டுமல்ல மனிதஇனத்திற்கே பாரிய ஆபத்தாகஅமையும்.
கப்பலிலில் இருந்து மீட்கப்பட்ட 16பிலிப்பைன்ஸ் பிரஜைகளும் 4 கிரேக்கபிரஜைகளும் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு செவ்வாயன்று கொண்டுவரப்பட்டு கொரோனா தனிமைப்படுத்தல்முகாமிற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
படுகாயத்திற்கிலக்கான பிலிப்பைன்ஸ் மாலுமி பொறியியலாளர் எல்மோ கல்முனையில்...
சங்குமண்கண்டி கடற்பரப்பில் எரிந்துகொண்டிருந்த பனாமாக்கப்பலிலிருந்து கடற்படையினரால் மீட்கப்பட்ட பிலிப்பைன்ஸ் மாலுமி பொறியியலாளர் எல்மோ தற்சமயம் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகச்சைபெற்றுவருகிறார்.
அவரை கடற்படையினர் 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை பகல் சங்குமண்கண்டிகடற்பரப்பில் எரிந்துகொண்டிருந்த கப்பலில் படுகாயங்களுடன் மீட்டு வேறொரு கப்பலில் கல்முனைக்கடலுக்குகொண்டுவந்து அங்கிருந்து இயந்திரபப்படகு மூலமாக கரைக்குக்கொணரப்பட்டு கொரோனா முன்பாதுகாப்பு செயற்பாடுடன் அம்புலன்ஸ் பொலிசார் சகிதம் கல்முனை ஆதாரவைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
அங்கு என்ன நடந்தது என்பது பற்றி வைத்தியசாலையின் வைத்தியஅத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் விபரிக்கிறார்.
கடற்படையினரால் கொண்டுவரப்பட்ட 57வயதான பிலிப்பைன்ஸ் மாலுமிக்கு எவ்வித தீக்காயங்களும் இருக்கவில்லை. மாறாக கப்பலின் வொயிலர் வெடித்தவிபத்து காரணமாக நெஞ்சிலும் வயிற்றுப்பகுதியிலும் பாரிய வெட்டுக்காயங்களிருந்தன. விலாஎலும்பு உள்ளிட்ட சில எலும்புகள் முறிவுக்குள்ளாகியிருந்தன.
முதலில் அவரை கொரோனாவிற்கான பிசீஆர்பரிசோதனைக்கான மாதிரியை எடுத்தபின்னர் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் சத்திரசிகிச்சைநிபுணர் டாக்டர் எஸ்.சிறிநீதன் தலைமையிலான குழுவினர் இரவு 6மணிமுதல் 9மணிவரை பாரிய சத்திரசிகிச்சையிலீடுபட்டனர்.
அதன்பின்னர் அவர் அதிதிவீரசிக்சைப்பிரிவிற்கு மாற்றப்பட்டு தற்போது அங்கு அவருக்கு பாதுகாப்பானநிலையில் சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. செயற்கைச்சுவாசம் வழங்கப்பட்டுவருகிறது.
இதேவேளை குறித்த பிலிப்பைன்ஸ் மாலுமி அனுமதிக்கப்பட்டதும் வெளிநாட்டுப்பிரஜை என்பதால் கொரோனாப் பரசோதனைக்காக இரத்த மாதிரி எடுக்கப்பட்டது.அம்மாதிரியை சோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது.அந்தப்பரிசோதனையின் அறிக்கை வெள்ளிக்கிழமை மாலை 'நெகட்டிவ்' என கிடைக்கப்பெற்றுள்ளது.அதாவது கொரோனாத்தொற்று இல்லையென பதிவாகியது.
மேற்கொண்டு அவரை அதிதீவிர சிகிச்சைப்பிரிவின் தனிமைப்படுத்தல்பிரிவிலிருந்து விடுவித்து சாதாரண பிரிவில் வைக்கப்பட்டுள்ளது.
அநேகமாக இன்று(10) அவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு செல்ல விடுவிக்கப்படலாமெனத் தெரிகிறது. அவர் தற்போது பேசுவதாகவும் தம்மை நன்றாக கவனித்த வைத்தியசாலை டாக்டர்கள் நர்சுகள் உள்ளிட்ட அனைவருக்கும் கண்கள் பனிக்க நன்றிகூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை எல்மோ வெளிநாட்டுப்பிரஜை என்பதால் வைத்தியசாலைக்குரிய செலவுதொகையை செலுத்தவேண்டிவரும்.அதனை கப்பல் காப்புறுதி நிறுவனம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை கடந்த ஒருவாரகாலமாக கல்முனை பிராந்திய கடற்பிரதேசங்களில் எண்ணெய் பரவல் காரணமாக பெரும்பாலான மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. கடல்மீன்களின் தட்டுப்பாடும் நிலவுகிறது.
தீ விபத்து முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும் கிழக்கு மாகாண அம்பாறை மாவட்ட மீனவர்கள் எவரும் மீன்பிடிப்பதற்கு கடலுக்குச் செல்லவில்லை.
.இருந்த போதிலும் இத்தீ விபத்தினால் கடலில் கச்சா எண்ணெய் கசிவு ஏற்படாதென பல்வேறு தரப்பினரும் அறிவித்துள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்புஇ கல்முனை உள்ளிட்ட பகுதிகளில் எண்ணெய் பரவல் அடையாளங்கள் தென்பட்டுள்ளன.
இவ்வெண்ணெய் பரவலானது விபத்திற்குள்ளன கப்பலின் எண்ணெய் கசிவா அல்லது வேறு படகிலிருந்து வெளியாகிய எண்ணெய் கசிவா என அறிய முடியவில்லை.
அத்துடன்இ குறித்த விபத்து தொடர்பாக முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்கள் மாநகர சபைகளுக்கு அம்பாறைக்கச்சேரி மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்திருந்தது.
பலத்த போராட்டம்.
இலங்கை இந்திய ரஸ்ய நாட்டு கடற்படை விமானப்படையினரின் பலத்த போராட்டத்தின்மத்தியில் தற்போது தீகட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. காலநேரவெட்ப்தட்ப சூழல் சிலவேளை பாதகமாக அமைந்தால் மீண்டும் தீபரவாது என்பதற்கில்லை. எனினும் எமது படைத்தரப்பினர் 24மணிநேரமும் விழிப்பாகஇருந்து அவதானித்துவருகின்றனர். வெளிநாட்டு நிபுணர்கள்குழுவும் இப்பணியில் இறங்கியுள்ளனர். சட்டமாஅதிபரின் கருத்திற்கிணங்க பாதிப்பு தொடர்பில் குறித்த கப்பல்நிறுவனம் ஈடுசெய்யவேண்டும். கப்பலை சர்வதேசபரப்பிற்கு கடத்தவேண்டும் என்பதெல்லாம் சமகால பிரச்சினைகள்.
இந்நிலையில் ஆகாயத்திலிருந்து நீர்பீச்சி தீயை அணைப்பதில் எமது விமானப்படையினர் ஈடுபடடிருந்தனர். அவ்வமயம் அவர்கள் கையாண்ட கூடை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. எனவே அக்கூடை தொடர்பாக இத்திருணத்தில் சில தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுவோம்.
எம்டி நியூ டயமண்டில் தீயைக் கட்டுப்படுத்த ஒரு கேபிளின் உதவியுடன் ஹெலிகாப்டரில் இருந்து கீழே தொங்கும் 'மூங்கில் வாளி' என்று அழைக்கப்படும் நெகிழ்வான நீர் தொட்டியைப் பயன்படுத்தி விமானப்படை தீயை அணைக்கப்போராடியதை ஊடகங்களில் கண்டிருப்பீர்கள்.
'பாம்பி வாளி' என்பது இதன் வர்த்தக பெயர் மற்றும் 'மான்சூன் வாளி 'மற்றும் 'ஹெலி வாளி' போன்ற பல பொதுவான பெயர்கள் இதைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
270 முதல் 9840 லிட்டர் வரை பல்வேறு கொள்ளளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. கொள்கலனின் வெளிப்புறத்தில் உள்ள ஆரஞ்சு துண்டு பாலிவினைல் குளோரைடு மற்றும் உள்ளே சுவர் கண்ணாடியிழைகளால் ஆனது.
இது ஒரு குடை போல மடிக்கப்படலாம் மற்றும் ஒரு கேபிளின் உதவியுடன் தூக்கும் போது தானாக விரிவடையும் ஒரு பொறிமுறையைக் கொண்டுள்ளது. கேபிளை மேலிருந்து தாழ்த்தி நீர் மேற்பரப்பில் கீழே தொடும்படி செய்யும்போது கப்பலின் பக்கத்திலுள்ள நிலைப்பாடு அதன் சமநிலையை இழந்து கப்பல் தண்ணீரில் மூழ்கும்.
நீர்மட்டம் மூழ்கும் அளவுக்கு அதிகமாக இல்லாத ஒரு நீர்த்தேக்கத்தில்இ தொட்டியை தண்ணீரில் நிரப்ப சிறப்பு வடிவ வால்வு (வால்வு) பயன்படுத்தப்படுகிறது.
நிரப்பப்பட்ட நீர் பைலட்டின் கையில் ஒரு கட்டுப்படுத்தியின் உதவியுடன் தேவையான இடங்களில் தேவையான அளவுகளில் வெளியிடப்படுகிறது. தொட்டியின் அடிப்பகுதியில் ஒரு வால்வைத் திறந்து தண்ணீரை விடுவிப்பதன் மூலம் இது செய்யப்படுகிறது. ஹெலிகாப்டரில் நீர் வெளியேற்றப்பட வேண்டிய விமானிக்கு சமிக்ஞை செய்ய ஒரு உதவியாளர் இருக்க வேண்டும்.
வால்வு திறப்புக்கு கீழே ஒரு சாதனத்தை பொருத்துவதன் மூலம் தண்ணீரை ஒரு பரந்த பகுதியில் சிதறடிக்கலாம் அல்லது ஒரு நெடுவரிசையாக விடுவிக்கலாம்.
மூங்கில் வாளி 1982 ஆம் ஆண்டில் கனடாவைச் சேர்ந்த டான் ஆர்னி என்பவரால் முதன்முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
இது தற்போது 110 க்கும் மேற்பட்ட நாடுகளில் தீயணைப்புப் பணியில் பயன்படுத்தப்படுகிறது. வன தீ கட்டுப்பாட்டில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தேவைப்பட்டால் அணைக்கும் இரசாயனங்கள் இங்கே பயன்படுத்தப்படலாம்.
எச்சரிக்கை!
விபத்திற்குள்ளாகியுள்ள கப்பலில் தீச் சம்பவம் அதிகம் ஏற்பட்டதால் கிழக்குப்பிராந்திய (வடக்கு தெற்கு) கடற் பகுதிகளில் எண்ணை கசிவின் தாக்கம் அதிகரித்து கடல் நீரூடன் கலக்கலாம். .
இதன் விளைவாக கடலின் அலைகள் சற்று உயர்ந்தும் சற்று கொந்தளிப்பாகவும் காணப்படும் .எனவே மீனவர்கள் மற்றும் கரையோர பிரதேசங்களில் உள்ள மக்கள் சற்று அவதானமாக இருக்குமாறுகேட்டுக்கொள்கின்றனர்.
அம்பாறை சங்கமன்கண்டி கடற்பரப்பில் தீப்பிற்றிய எம்.டி நியூ டயமன்ட் கப்பல் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக பிரித்தானியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த விசேட நிபுணர்கள் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர்.
இதேவேளைஇ கப்பலில் இருந்து எண்ணை கசிவு ஏற்பட்டால் அதனை தடுக்கும் வகையில் இந்திய கடற்பாதுகாப்பு திணைக்களத்தின் 20 பொறியியலாளர்கள் அந்த பகுதிக்கு வருகைத் தந்துள்ளனர்.
மேலும் இவ்வாறு மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வருகை தந்த நிபுணர்கள் குழுவில் இரு பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
இந்த நிபுணர் குழு குறித்த கப்பல் தொடர்பில் ஆராயும் முகமாக அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் வாடிவீட்டு கடற்கரையோரமாக சென்று கடற்படையின் வேகப்படகின் ஊடாக ஆழ்கடலில் தரித்துள்ள கடற்படையின் யுத்தகப்பல் ஒன்றின் ஊடாக தீப்பற்றிய பாரிய கப்பலை நோக்கி சென்றனர்.
இவர்களில் மீட்பு பணிகளின் விசேட நிபுணர்களும் இடர்களை மதிப்பிடுபவர்களும் சட்ட ஆலோசகர்களும் அடங்குகின்றனர்.
இதேவேளை அம்பாறை கரையோரங்களில் நாரா எனும் கடல்வள ஆராய்ச்சி நிறுவனம் செவ்வாய் புதன் ஆகிய இருதினங்களில் பெரிய நீலாவணை தொடக்கம் ஒலுவில் வரையான பகுதி மீனவர்களிடம் வாக்குமூலங்களைப்பெற்றதுடன். கடல்நீர்ப்பகுப்பாய்வையும் மேற்கொண்டுள்ளனர்.நேற்று(9)புதன்கிழமை பாணமை பொத்துவில் திருக்கோவில் போன்ற முக்கிய கடரோரங்களில் ஆய்வுகளை முன்னெடுத்தது.
இதேவேளை சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபையும் இவ்வாராய்ச்சியிலும் பரிசோதனையிலும் கடந்த சிலதினங்களாக ஈடுபட்டுவருகின்றன.
எதுஎப்படியிருப்பினும் தீவிபத்து எண்ணெய்க்கசிவு போன்ற விவகாரங்களில் உடனடியாக எந்த முடிவுக்கும்வரமுயாதிருப்பதாகக்கூறப்படுகிறது.எனவே நிலைமையை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
No comments:
Post a Comment