'இதுபீரங்கிய பூட்டிய கப்பல்' : இன்று காரைதீவில் கருணா காட்டம். - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Monday, July 6, 2020

'இதுபீரங்கிய பூட்டிய கப்பல்' : இன்று காரைதீவில் கருணா காட்டம்.
அம்பாறையில் 22தமிழ்க்கிராமங்கள் பறிபோயுள்ளன.
பிரதமரும் ஜனாதிபதியும் இருக்கும்வரை தமிழ்மக்கள்மீது கைவைக்கவிடமாட்டேன்.

இன்றைய பிரதமர் மஹிந்தராஜபக்ச மற்றும் ஜனாதிபதி கோட்டபாய ஆகியோரது ஆட்சி இன்னும் 15வருடங்களுக்கு இருக்கும். அவர்கள் இருக்கும்வரை தமிழ்மக்கள் மீது யாரும் கைவைக்கவிடமாட்டேன்.

இவ்வாறு காரைதீவில் இன்று கட்சிதேர்தல் பணிமனையைத் திறந்துவைத்துரையாற்றிய தமிழர் ஜக்கிய சுதந்திரமுன்னணித்தலைவரும் அகில இலங்கை தமிழர்மகாசபை திகாமடுல்ல மாவட்ட வேட்பாளருமாகிய கருணா அம்மான் என அழைக்கப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் காட்டமாக சூளுரைத்தார்.

காரைதீவு விபுலாநந்த வீதியில் த.ஜ.சு.முன்னணி தேர்தல் அலுவலகம் திறந்துவைக்கும் நிகழ்வு இன்று(5) ஞாயிற்றுக்கிழமை திகாமடுல்ல மாவட்ட அ.இ.த.மகாசபை வேட்பாளரான காரைதீவைச்சேர்ந்த தியாகராசா ஞானேந்திரம் தலைமையில் நடைபெற்றது.

அங்குரையாற்றிய கருணா அம்மான் மேலும் பேசுகையில்:

1958ஆம் ஆண்டு முதல் அம்பாறை மாவட்டத்தில் மொத்தமாக 22தமிழர் கிராமங்கள் பறிபோயுள்ளன. இன்று கல்முனையில் தரவைப்பிள்ளையார் ஆலயவீதி கடற்கரைப்பள்ளிவாசல் வீதியாக்கபட்டுள்ளது. பாண்டிருப்பில் செட்டியார்தெரு பெயர்மாற்றப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் கைகட்டி பார்த்துக்கொண்டிருந்துவிட்டு இன்று மீண்டும் தேசியம் பேசிக்கொண்டு வருகிறார்கள்.


முன்னாள்எம்.பி. எம்.சி.கனகரெட்ணத்திற்குப்பிறகு வந்த எம்.பிக்கள் அனைவரும் அம்பாறைத்தமிழ்மக்களை தொடர்ந்து ஏமாற்றியே வந்துள்ளனர். தமிழ்மக்களின் காணிகளை சுரண்டிய மாற்றினத்தாரை ஏன் என்றும் கேட்கவில்லை.அவர்களுடன் நல்லுறவு பேசி தங்களை வளப்படுத்திக்கொண்டனரே தவிர மக்களைக்கவனிக்கவில்லை.


த.தே.கூட்டமைப்பை உருவாக்கியது நானே. ஆனால் சம்பந்தர் ஜயா 'அப்படியில்லை புலிகளால் உருவாக்கப்படவில்லை 'என்று கூறுகிறார்;. உண்மையில் அக்கட்சி உருவாக்கத்தின்போது அருகில் நானிருந்தேன். இன்றும் உயிருடன்இருக்கிறேன். இதனை எப்படி மறைப்பது?ஆனால் மாவை அண்ணன் அதில் நேர்மைத்தன்மையுடன் செயற்படுகிறார்.


த.தே.கூட்டமைப்பில் அன்று நல்லதலைவர்கள் இருந்தனர். இன்று மாவையைத்தவிர தரமான தலைவர்கள் இன்றில்லை. சுமந்திரன் வடக்கில் ஒரு கதை தெற்கில் ஒருகதை. அன்ரன் பாலசிங்கத்துடன் அவரை ஒப்பிடுகிறார். அன்ரன்பாலசிஙகத்தின் செருப்புக்கும் இவர் அருகதையில்லை. தமிழர்போராட்டத்தை சர்வதேசத்திற்கு கொண்டுசென்றவர் அன்ரன்பாலசிங்கம்.


அம்பாறை மாவட்ட தமிழ்மக்ளது இருப்பைப்பாதுகாத்து பொருளாதாரத்தை வளமாக்குவதே எனது இலட்சியம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நான் என்ன செய்தேன்? என்று கேட்கின்றனர்.
அங்கு எனதுகையால் 3200பட்டதாரிகளுக்கு தொழில்வழங்கினேன். 1000பேருக்கு சிற்றூழியர் நியமனம்வழங்கினே;. உயரதிகாரிகள் பலரைப்பாதுகாத்தேன். 300மாதர்சங்கங்களுக்கு 300லட்சருபா வழங்கினேன்.
எழுவான்கரை படுவானகரையை இணைக்கும் மண்முனைப்பாலத்தை கட்டினேன். 50கோடிருபா செலவில் களுவாஞ்சிக்குடி ஆதாரவைத்தியசாலையில் கட்டடம் கட்டினேன். புற்றுநோய் வைத்தியசாலையை மட்டக்களப்பில் கட்டினேன். குடிதண்ணீர் மின்சாரம் என்பவற்றை 90வீதமான மக்களுக்கு வழங்கினேன்.


இவற்றையெல்லாம் செய்துவிட்டுத்தான் அம்பாறைக்குவந்துள்ளேன். இங்கு முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு புளிக்கரைக்குது.கூடவே தமிழ் தேசியக்கூட்டமைப்பினருக்கும் பயம்வந்துவிட்டது.
கடந்த 4அரை வருடகாலம் சீரழித்துவிட்டார்கள். கொந்தராத்து மரவியாபாரம் மண்வியாபாரம் இதுதான் கோடீஸ்வரன் செய்த சேவைகள். வாக்களித்த மக்களை நடுத்தெருவில் விட்டுவிட்டு இன்று மீண்டும் வருகிறார்.


கடந்ததேர்தலில் அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனது சம்பளம் அனைத்தையும் கல்விக்கும் மக்களுக்கும் வழங்குவேன் என்றார். எங்கே ஒருசதம் வழங்கினாரா? இப்படி ஏமாற்றிவிட்டு என்னமுகத்தோடு இன்று மீண்டும் வோட்டுக்கேட்டு வருகிறார்?


அம்பாறை மாவட்டத்தில் த.தே.கூட்டமைப்பு தோல்வியடையப்போவது உறுதி. இதையறிந்துகொண்ட சம்பந்தர் இன்று தேசியப்பட்டியல் அம்பாறைக்குத் தருவதாக கூறியுள்ளார். ஏற்கனவே ஒரு தடவை தந்தது அனைவருக்கும் ஞாபகமிருக்கும். அதுபோலத்தான். தேர்தல் முடியும்வரை அக்கதை இருக்கும்.


எனவே எமது சின்னம் கப்பல் . அது வெறும் கப்பல் அல்ல. பீரங்கி பூட்டிய கப்பல். எனவே தத்தளிக்கின்ற அம்பாறை தமிழ்மக்களை காப்பாற்றி கரைசேர்க்கின்ற அக்கப்பலுக்கு வாக்களித்து வாழ்வை வளப்படுத்துவதோடு இருப்பையும் காப்பாற்றிக்கொள்ளவேண்டும். என்றார்.


கூட்டத்தில் அ.இ.த.மகாசபைத்தலைவர் த.கோபாலகிருஸ்ணன் முன்னாள் த.அ.கட்சி மூத்தஉறுப்பினர் கு.ஏகாம்பரம் உள்ளிட்ட பல பிரமுகர்கள் உரையாற்றினார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.