நான் துரோகியா? இல்லவே இல்லை. ஆனால் பல துரோகிகள் நல்லவர்கள் போல அரசியலில் வலம்வருகிறார்கள். மக்கள் வெகுவிரைவில் அறிவார்கள். அம்பாறை தமிழர்கள் தமது இருப்பை நிலைநிறுத்துவதானால் பீரங்கிபூட்டிய கப்பலுக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு கல்முனை தமிழ் இளைஞர்கள் மத்தியில் உரையாற்றிய தமிழர் ஜக்கிய சுதந்திரமுன்னணித்தலைவரும் அகில இலங்கை தமிழர்மகாசபை திகாமடுல்ல மாவட்ட வேட்பாளருமாகிய கருணா அம்மான் என அழைக்கப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் விளக்கமாக உரையாற்றினார்.
கல்முனை வலய தமிழ் இளைஞர் ஒன்றியத்தலைவர் ஆறுமுகம் நிமலன் தலைமையில் பெருந்தொகுதி இளைஞர்கள் ஒன்றிணையும் நிகழ்வு நடைபெற்றது.
அங்கு நீண்டகாலமாக ஈ.பி.ஆர்.எல்.எவ்.அமைப்பின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தரும் கல்முனை அமைப்பாளருமாக இருந்த எஸ்.புண்ணியநாதன் கருணாவுடன் இணையும் நிகழ்வும் இடம்பெற்றது. அவருக்கு கருணா பொன்னாடை போர்த்து வரவேற்றார்.
அங்கு 'நான் துரோகியா?' என்றபொருளில் கருணா அம்மான் மேலும் பேசுகையில்:
1983இல் எனது 19 வது வயதில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து தமிழ்த் தேசியத்திற்காகச் செயற்பட்டுத் தளபதி ஸ்தானத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரதித் தலைவர் ஸ்தானத்திற்கும் உயர்ந்து உயிரைச் துச்சமென மதித்து 21 ஆண்டுகள் போராட்ட வாழ்விலே காலத்தைக் கழித்தவன்.2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த இலங்கை அரசாங்கத்துடனான சமாதான உடன்படிக்கையையும் போர் நிறுத்தத்தையும் தொடர்ந்து நோர்வே நாட்டு அரசாங்கத்தின் அனுசரணையுடன் அந்நாட்டின் தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் அண்ணனும் நானும் கலந்து கொண்டோம்.
அப்போது தமிழர் தரப்பிலிருந்த ஆயுத பலத்தின் விளைவாகவும் சர்வதேச சமூகத்தின் அழுத்தங்கள் காரணமாகவும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த ஓர் உள்ளக சுயாட்சி அதிகாரப் பகிர்வு அலகுக்கு இலங்கை அரசாங்கம் சம்மதம் தெரிவித்தது. அன்று நிலவிய தென்னிலங்கை அரசியல்--இந்து சமுத்திரப் பிராந்திய அரசியல்---பூகோள அரசியல் சூழலில் அதனை ஏற்றுக்கொண்டு முழுமையான அரசியல் இலக்கை நோக்கி முன் நோக்கிச் செல்வதே இராஜதந்திர ரீதியான - அறிவு பூர்வமான அணுகுமுறையாக இருந்தது. அதனால் அந்த உடன்படிக்கையில் நான் கையெழுத்திட்டது மட்டுமல்லாமல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் அவர்களும் கையெழுத்திட்டார்.ஆனால் நாங்கள் நாடு திரும்பியதும் துரதிஷ்டவசமாக தலைவர் பிரபாகரன் அவ் உடன்படிக்கையை நிராகரித்தார். இதனால் அவருக்கும் எனக்கும் தனிப்பட்ட ரீதியில் அல்லாமல் கொள்கை ரீதியான முரண்பாடு உண்டானது.
மட்டுமல்லாமல் வடக்கு மாகாணத்தில் நடைபெற்ற போர் முனைகளிலெல்லாம் அதிகம் களப்பலியானவர்கள் கிழக்கு மாகாணப் போராளிகளே என்கின்ற உண்மை உங்கள் அனைவருக்கும் தெரியும். இது உலகமே ஒப்புக்கொண்ட விடயம்.ஆனால் தலைவர் அவர்களினால் தமிழினத்தின் துறை சார்ந்த 32 விடயங்களுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டவர்களில் ஒருவர் தானும் கிழக்கு மாகாண போராளியாக இருக்கவில்லை. நூறு வீதம் வடக்கைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள். இதனைச் சுட்டிக்காட்டிய நான் கிழக்கு மாகாண நிர்வாகத்தைச் சுயாதீனமாக என்னிடம் ஒப்படைக்கப்படுவதற்கான அனுமதியை தலைவரிடம் முறையாகக் கோரினேன். அந்த அனுமதி எனக்கு மறுக்கப்பட்டது.இந்த நிலையில்தான் கிழக்கு மாகாணத் தமிழர்களின் நலன்கள் சார்ந்து நான் 2004 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகினேன்.தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக அல்லாமல் எனது மக்கள் நலன் சார்ந்த கொள்கைக்காக நான் விலகியதைக் காட்டிக்கொடுப்பு என்று கூற முடியுமா? நான் எனது மனச்சாட்சிப்படி நடந்து கொண்டது துரோகமாகுமா? பிரபாகரன் அவர்கள் ஒரு போதும் என்னைத் துரோகி என்று சுட்டியது இல்லை.
ஆனாலும் துரதிஷ்டவசமாக என்மீதும் என்னைச் சேர்ந்த கிழக்கு மாகாணப் போராளிகள் மீதும் வன்னிப் புலிகளினால் சகோதர யுத்தம் தொடுக்கப்பட்டது.ஆனாலும் நான் பழிவாங்கும் உணர்வைத் தவிர்த்துச் சகோதரப் படுகொலைகளை பக்குவமாகத் தவிர்த்துக் கொண்டேன். சகோதரப் படுகொலைகளைத் தவிர்ப்பதற்காகவே எனது கட்டுப்பாட்டில் இருந்த 6000 போராளிகளை நான் அவரவர் வீடுகளுக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைத்தேன்.
2009ல் நடந்த முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் சரணடைந்த போராளிகள் 12000பேரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் எனக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி அவர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பி அவர்கள் எல்லோருக்கும் புனர்வாழ்வளிக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள்.அவ்வாறு புனர்வாழ்வளிக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பெற்ற போராளிக் குடும்பங்களுக்கு இன்றும் கூட என்னால் இயன்றளவு வாழ்வாதார வசதிகளைப் பெற்றுக் கொடுத்துப் பணிபுரிந்து வருகிறேன்.
உண்மை நிலைமைகள் அப்படி இருக்கையில் மக்களை வஞ்சித்து வாக்குச் சேகரிக்கும் தமது சுயநல அரசியலுக்காக யாழ் மேலாதிக்க மேட்டுக்குடி அரசியல் சிந்தனை கொண்ட பிற்போக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும்--புலம்பெயர் சமூகத்தின் ஒரு பிரிவினரும்---முஸ்லிம் அரசியல்வாதிகளும் மட்டுமே என்னைத் துரோகி எனத் தூற்றுகின்றனர்.
அன்றியும் நான் 2004 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகியதன் காரணமாகவே 2009 இல் வடக்கிலே முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதி யுத்தம் கிழக்கிலே பரவாமல் தடுக்கப்பட்டது.அதனாலேயே அன்று முள்ளிவாய்க்காலில் அப்பாவித் தமிழர்களுக்கு ஏற்பட்ட பேரழிவைப் போன்ற அவலம் கிழக்கிலே நிகழாமல் தவிர்க்கப்பட்டது. என் அன்புக்கு உரியவர்களே இப்போது சொல்லுங்கள் நான் துரோகியா?
எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் எனது வெற்றி எதிர்வு கூறலைப் பொறுக்க முடியாத முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் எனக்கு எதிராகக் கைகோர்த்துக் கூட்டுச்சதியில் இறங்கியுள்ளனர்.
எனவே எனது அன்புக்குரிய அம்பாரை மாவட்டத் தமிழர்களே! இவர்களின் சதியில் விழுந்துவிடாமல் அம்பாறை மாவட்டத் தமிழர்களின் எதிர்கால இருப்புக்காக என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்.
No comments:
Post a Comment