பொய்யான உணர்ச்சிகளை தூண்ட நாம் தயாராக இல்லை... - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Monday, July 6, 2020

பொய்யான உணர்ச்சிகளை தூண்ட நாம் தயாராக இல்லை...

பொய்யான உணர்ச்சிகளை தூண்ட நாம் தயாராக இல்லை.சிலர் கல்முனையை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடுகின்றார்கள்.கருணா என்னை கொல்லப்போகின்றார் என கூறி திரிகின்றனர் என இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட முதன்மை வேட்பாளரும் கட்சியின் ஸ்தாபக செயலாளர் நாயகமுமான சட்டமுதுமாணி வை.எல்.எஸ் ஹமீட் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக அம்பாறை திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் மயில் சின்னத்தில் இலக்கம் 8 இல் போட்டியிடுகின்ற அவர் கல்முனையில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் சனிக்கிழமை(4) நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது..
தேசிய காங்கிரஸை போட்டி கட்சியாக கருதவில்லை.இனவாத சூழ்நிலை எமது நாட்டில் காணப்படுகின்ற நிலையில் ஜனாசா எரிப்பு முஸ்லீம் மக்களின் மனங்களை ஏக்கங்களை வரவழைத்துள்ளது.முஸ்லீம்களின் உரிமைகளில் தற்போது சிலர் கைவைக்க தொடங்கியுள்ளனர்.2015 ஆண்டு மொத்த சமூகமும் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை எதிர்த்து நின்ற போது தனித்து நின்று ஆதரவு வழங்கியவர் தான் தேசிய காங்கிரஸ் தலைவர்.அவ்வாறு தியாகம் செய்து தனது பாராளுமன்ற ஆசனத்தை இழந்த இவர் தற்போது அவரின் விசுவாசத்திற்குரிய பெரும்பான்மை கட்சியினால் தனித்து விடப்பட்டுள்ளார்.ஆனாலும் அவர் மொட்டு கட்சியின் அங்கமாக தான் செயற்பட்டு வருகின்றார்.சகோதரர் அதாவுல்லாஹ் அவர்கள் தனது எஜமானுக்கு கட்டுப்பட்ட ஒருவராகவே இருந்து வருகின்றார்.

எனவே தான் சமூக அரசியலுக்கும் சகோதரர் அதாவுல்லாஹ் அவர்களுக்கும் எதுவித தொடர்பும் இல்லை.மாவட்டத்தில் தான் மாத்திரம் பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கு அரசியல் செய்கின்ற ஒருவர்.இவர் தனது எஜமானை திருப்தி படுத்தி வருகின்றாரே தவிர முஸ்லீம் சமூகத்தினை எந்தவொரு சந்தரப்பத்திலும் திருப்தி படுத்தவில்லை.ஜனாசா எரிப்பிலும் எமது சமூகத்தை கைவிட்டு தனது எஜமானான தற்போதைய பிரதமருக்கே தனது விசுவாசத்தை காட்டியிருந்தார்.முஸ்லீம் கட்சி என்றால் அம்மக்களின் உரிமைகள் பிரச்சினைகளை பார்க்கின்ற கட்சியாக இருக்க வேண்டும்.தவிர தனது எஜமானை திருப்தி படுத்த நினைப்பவர்கள் உண்மையான முஸ்லீம் மக்கள் பிரதிநிதிகளாக இருக்க முடியாது.இதனை மக்கள் தற்போது தெளிவாக உணர்ந்து இருக்கின்றார்கள்.

அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் தேசிய காங்கிரஸ் என்பது ஒரு பேசு பொருள் அல்ல.இம்முறை அம்பாறை மாவட்டத்தில் எமது கட்சி 3 ஆசனங்களை பெற்றே தீரும் என்றார்.மக்களின் வாக்குகளை பெற தற்போது இனவாதம் ஒரு உத்தி பிரதேச வாதம் ஒரு உத்தியை தூண்டுகின்றார்கள்.பணமுள்ளவர்கள் அடுத்த கட்டமாக பணத்தை இறைக்கின்றனர்.இந்த பின்னணியில் தான் கருணாவை மக்கள் பிரதிநிதியாக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது அவருக்கு தெரியும்.அவரது சொந்த மாவட்டமான மட்டக்களப்பு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற காரணத்தினால் தற்போது அம்பாறை மாவட்டத்திற்கு வந்துள்ளார்.அம்பாறை மாவட்டத்தில் பெரும்பான்மையினராக முஸ்லீம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 

இதில் பிரதேச வாதத்தை முஸ்லீம் வேட்பாளர்களும் தமது அரசியலுக்காக பயன்படுத்துகின்றனர்.அதே போன்று கருணா அம்மான் முஸ்லீம் மக்களுக்கு எதிராக தமிழ் மக்களிடம் பிரச்சாரத்தை முன்னெடுத்து வாக்குகளை சேகரிக்க முற்படுகின்றார்.அவரால் தேர்தலில் முஸ்லீம் மக்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை.தேர்தல் முடிவுகளும் அவரால் பாதிக்கப்பட போவதில்லை.ஆனால் தனக்கு வாக்குகளை அதிகரித்து கொள்வதற்காக முஸ்லீம்களை கருவியாக பயன்படுத்துகின்றார்.எம்மவர்களில் சிலரும் தமிழ்ர்களை கருவியாக பாவித்தும் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளார்கள்.ஆனால் நாங்கள் உண்மைகளை கூறுகின்றோம்.நேர்மையாக செயற்படுகின்றோம்.நாங்கள் தமிழ்ர்களின் உண்மையான பிரச்சினைகளை எடுத்து கூறுகின்றோம்.

அவர்களுக்கெதிராக நாங்கள் எந்தவொரு இனவாத கருத்துக்களையும் முன்னெடுக்கவில்லை.இந்த நாடு மூன்று சமூகங்களுக்கும் சொந்தமானது.இங்கு சிங்களவர் தமிழர் முஸ்லீம்களும் வாழ வேண்டும்.ஆனால் முஸ்லீம்களின் உரிமை விடயத்தில் தமிழர்கள் சிங்களவர்கள் கை வைக்க கூடாது.மூன்று இனங்களும் அவரவர் உரிமைகளில் தலையிடாது விட்டால் தான் எமது மாவட்டத்தில் நாட்டில் அமைதி நிலவும்.சிலர் முஸ்லீம்கள் கொடுமையானவர்கள் என சித்தரித்து வருகின்றார்கள்.கடந்த காலங்களில் பள்ளிவாசல்களில் முஸ்லீம்களை முஸ்லீம்களா கொன்றார்கள்.கிழக்கின் தலைநகரான கல்முனையை துண்டாட நினைப்பது யார்.?

தமிழ் பேசும் மக்கள் என சந்தர்ப்பங்களில் கூறுகின்றார்கள்.ஆனால் கரையோர மாவட்டத்திற்கு உடன்பாடு இல்லை.ஏன் கரையோர மாவட்டத்தினை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை எனின் அம்மாவட்டத்திற்கு அரச அதிபராக முஸ்லீம் ஒருவர் வந்துவிடுவார்.எனவே ஒரு முஸ்லீம் இருப்பதை விட ஒரு சிங்களவர் இருப்பது மேல் என்ற நிலைப்பாட்டில் அவர்கள் உள்ளார்கள்.கிழக்கு மாகாண ஆளுநராக சகோதரர் ஹிஸ்புல்லாஹ் இருக்கின்ற போது அதற்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்கள்.அதன் பின்னர் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவர் ஆளுநராக வந்தார்.ஆனால் அதை பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.இவ்வாறான மனநிலையில் தான் கருணா அம்மானின் பிரச்சாரமும் அமைகின்றது.இவ்வாறான பிரச்சாரங்களினால் எமக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது.

கல்முனை தொகுதியை முஸ்லீம் காங்கிரஸ் தேசிய காங்கிரஸ் என்பன கைப்பற்ற போவதில்லை.தேசிய காங்கிரஸூக்கு கல்முனை தொகுதியில் சுமார் 1000 வாக்குகளே கிடைக்க கூடியதாக இருக்கும்.இதில் சாய்ந்தமருது வாக்குகளை உள்ளடக்கவில்லை.சாய்ந்தமருது பகுதியில் சில ஆயிரம் வாக்குகளை பெறுவார்கள் அதை மறுப்பதற்கு இல்லை.எனினும் இத்தொகுதியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸே கைப்பற்றும்.எமது கட்சி உணர்ச்சி அரசியலை செய்யவில்லை.அறிவற்ற அரசியலையும் செய்யவில்லை.தெளிவான அரசியலை செய்கின்றோம்.பொய்யான உணர்ச்சிகளை தூண்ட நாம் தயாராக இல்லை.சிலர் தான் இனவாதங்களை பேசி திரிகின்றார்கள்.தாங்கள் தான் கல்முனையை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடுகின்றார்கள்.கருணா என்னை கொல்லப்போகின்றார்.கருணா சொல்கிறார் இவருக்கு சீனவெடி போதும் என்று கூறுகின்றார்.இவ்வாறு ஆளுக்கு ஆள் குற்றஞ்சாட்டி அனுதாப அலைகளை கூட்டி வாக்கெடுப்பதற்கு முயல்கின்றனர் எனக் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.