மட்டக்களப்பு அரச அதிபரின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்துபோராட்டம் ஒன்று கல்முனை பிரதேச செயலக முன்றலில் இன்று மாலை இடம்பெற்றது.
அண்மையில் அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக அறுவடை செய்யப்படவிருந்த வேளாண்மைகள் அழுகிய நிலையில் பாதிப்படைந்திருந்தன.
இந்நிலையில் குறித்த போராட்டத்தில் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சுமார் 25க்கும் அதிகமானோர் பங்கேற்று பல்வேறு சுலோகங்களை ஏந்தி போராட்டத்தை முன்னெடுத்தனர்.
மேலும் இப்போராட்டத்தில் மட்டக்களப்பு முகத்துவாரம் ஆற்றுவாய் வெட்டும் முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான ஸ்ரீ லங்கா பெரமுனை கட்சியின் திகாமடுல்ல தேர்தல் மாவட்ட 2ஆம் இலக்க வேட்பாளர் கீர்த்தி ஸ்ரீ விஜயசிங்க கலந்து கொண்டிருந்ததுடன் அவருடன் கைதாகி பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்ட விவசாயிகள்சிலரும் இப்போராட்டத்தில் இணைந்திருந்தனர்.
கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு முகத்துவாரத்தை திறந்து நீரை வெளியேற்றுமாறு அம்பாறை மாவட்ட விவசாயிகள் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டச் செயலாளர்களிடம் வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளனர்.
இதற்கமைய இவ்விரு மாவட்ட செயலகத்திலும் இரு வேறு தினங்களில் விவசாய அமைப்புகள் பொது அமைப்புகள் உள்ளடங்கலாக அரசாங்க அதிபர் தலைமையில் கூட்டம் இடம்பெற்ற போதிலும் எதுவித முடிவுகளும் இதுவரை எடுக்கவில்லை என விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த மழை வெள்ளம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கரைவாகுப்பற்றுஇ நற்பிட்டிமுனைஇ கிட்டங்கிஇ நாவிதன்வெளி போன்ற பகுதிகளில் பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தமது செய்கை நிலங்கள் முழுமையாக வெள்ளத்தால் பாதிக்கப்படுவதால் அதனை காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
No comments:
Post a Comment