நாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்தோமா?' பச்சைப்பொய் என்கின்றனர் திராய்க்கேணியைச் சேர்ந்த இரு தமிழ் யுவதிகள்.
'நாம் ஏழைகள்தான்.அதற்காக தமிழனின் தன்மானத்தை விற்று முஸ்லிம் காங்கிரசில் சேர வேண்டிய அவசியம் எமக்கில்லை' என்றும் கூறினர். அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேசசெயலாளர் பிரிவிலுள்ள திராய்க்கேணிக்கிராமத்தைச்சேர்ந்த செல்வி தேவராஜா மயுரி மற்றும் திருமதி எஸ்.விஜிதா ஆகியோர் ஊடகங்களுக்குக் கருத்துத்தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தனர். அட்டாளைச்சேனையில் இரு தமிழ்யுவதிகள் மு.கா.வில் இணைவு' என்ற தலைப்பிலான செய்தி பத்திரிகை இணையத்தளங்கள் மற்றும் முகநூல் வாயிலாக வெளியிடப்பட்டிருந்தன.
அச்செய்திக்கான புகைப்படமாக முன்னாள் சுகாதார இராஜாங்கஅமைச்சர் பைசால் காசிம் தமிழ்யுவதிகளான மயுரி மற்றும் விஜிதா ஆகியோரிடம் ஒரு கோவையை கையளிப்பதுபோன்றுள்ளது. அதற்கான செய்தியாக அகிலஇலங்கை மக்கள் காங்கிரசின் மயுரி தேசியகாங்கிரசின் கௌசல்யா ஆகியோர் தமது அங்கத்துவப்படிவங்களை முன்னாள் அமைச்சர் பைசால் காசிமிடம் கையளித்து எதிர்வரும் தேர்தலில் தாம் மு.காங்கிரசுக்கு ஆதரவுநல்குவதாக பிரசுரிக்கப்பட்டுள்ளது.
உண்மையில் கௌசல்யா என்பவர் அந்தப்படத்திலுமில்லை. அங்கு செல்லவுமில்லை என்பதும் படத்தில் நிற்கும் ஜீவிதா தொடர்பில் செய்தியில் எதுவுமே எழுதப்படவில்லையெனவும் பின்னர் தெரியவந்தது. இச்செய்தியை அறிந்ததும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளரும் தமிழ்ப்பற்றாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் உடனடியாக திராய்க்கேணிக்கு விரைந்து இருவரையும் சந்தித்தார்.
அவரிடம் அந்தப்படத்தில் நின்ற இரு தமிழ்யுவதிகளும் காணொளி கானொலி இரண்டிலும் பதிவுசெய்வதற்காக தமது வாக்குமூலங்களை வழங்கினர்.
அவர்கள் மேலும் கூறியதாவது:
கடந்த 16ஆம் திகதி இணைப்பாளர் றிசாத் வந்து கஸ்ட்டப்பட்ட உங்களுக்கும் மக்களுக்கும் 50பக்கட் உலருணவு நிவாரணம் தர அமைச்சர் பைசால் காசிம் அழைக்கிறார். வாருங்கள் போவோம். என்றார். நாமும் எமது சனங்களுக்கு உதவிசெய்யலாம் என்ற நோக்கில் நிந்தவூரிலுள்ள அமைச்சர் பைசால்காசிமின் அலுவலகத்திற்குச் சென்றோம்.
அங்கு நாம் சென்றதும் ஒரு பைலைத் தந்து அமைச்சருக்க வழங்குமாறு கூறி படம் பிடித்தார்கள். ஏன் படம் பிடிக்கிறீர்கள்? எனக் கேட்டோம். நிவாரணம் தந்தமைக்கு சான்று வேண்டுமே அதற்காகத்தான் என்றனர். அவ்வளவுதான் வந்துவிட்டோம். இக்கணம் வரை எந்த நிவாரணமும் தரப்படவில்லை. ஆனால் இன்று காலையில் முகநூலில் எமது படங்களைப்போட்டு தாறுமாறாக பலர் கமென்ட் பண்ணியுள்ளனர். அப்போதுதான் நாங்கள் மு.கா.வோடு சேர்ந்த என்ற அந்தப் பொய்யான செய்தி தெரியவந்தது.
நாம் எந்தச்சந்தர்ப்பத்திலும் மு.காவோடு சேர்ந்ததுமில்லை. சேரப்போவதுமில்லை. நாம் இல்லாத ஏழைகள்தான். நாம் வன்செயலில் பாதிக்கப்பட்டவர்கள். அன்றாடம் சாப்பிட வழியில்லாதவர்கள்தான். அதற்காக தன்மானத்தை விற்று பிழைக்கவேண்டும் என்றில்லை.
நிவாரணம் தருவதாகக்கூறி எமை அழைத்து மு.காவில் சேர்ந்ததாக பச்சைப்பொய்யான செய்தியை வழங்கி இன்று எம்மை எமது சமுதாயத்தின்மத்தியில் எமது தமிழினத்தின் மத்தியில் பாரிய அவமானத்தை ஏற்படுத்தித்தந்துள்ளனர்.
நாம் தமிழர்கள். ஏழைகள். எமது மக்களுக்கு ஏதாவதைப் பெற்றுக்கொடுக்கலாம் என்றெண்ணியே நாம் அங்கு சென்றோம். இப்படி இவர்கள் செய்வார்கள் என்றிருந்தால் அந்தப்பக்கமே போயிருக்கமாட்டம். அவர்கள் சாமான் தர்ற என்று சொல்லி அதையும் ஏமாற்றி இப்படியொரு அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளனர்.
தமிழினமே எம்மை மன்னியுங்கள். அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். என்றனர் அழாக்குறையாக.
No comments:
Post a Comment