யாழ்ப்பாணம் செல்வச்சந்நதி ஆலயத்திலிருந்து புறப்பட்ட யாழ்.கதிர்காம பாதயாத்திரைக்குழுவினர் 28தினங்களின் பின்னர் நேற்றுமாலை காரைதீவை வந்தடைந்தனர்.
26பாதயாத்திரீகர்கள் பங்கேற்ற அக்குழுவினரை காரைதீவு கதிர்காம பாதயாத்திரைச்சங்கத்தலைவர் வேல்சாமி மகேஸ்வரன் ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி செயலாளர் இ.பாக்கியநாதன் பொருளாளர் எஸ்.தேவதாஸ் ஆகியோர் வரவேற்றனர்.
பொருளாளர் எஸ்.தேவதாஸின் இல்லத்தில் வழமைபோல விசேடபூஜையும் மகேஸ்வரபூஜையும் இடம்பெற்றது. அங்கு சிலநிமிடநேரம் தரித்துநின்று பின்பு பாதயாத்திரீகர்கள் ஸ்ரீ கண்ணகை அம்மனாலயத்திற்குச் சென்று தங்கினர்.
யாழ்ப்பாணத்திலிருந்து இக்குழுவை வழிநடாத்திவந்த யாத்திரீகர்களான நந்தபால ஜெயம் ஆகியோர் கூறுகையில்:
நாம் வேல்சாமி தலைமையில் யாழ்.செல்வச்சந்நதி முருகனாலயத்திலிருந்து மே28ஆம் திகதி இப்பாதயாத்திரையை ஆரம்பித்தோம். இருந்தும் நாட்டின் அசாதாரணசூழ்நிலை கருதி மறுநாள் 29ஆம் திகதி கைதடியில்வைத்து பொலிசார் தடுத்துநிறுத்தினர். முதல்நாளுடன் தனதுஉடல்நிலைகருதி வேல்சாமி ஊர்திரும்பிவிட்டார்.
நாமும் பொலிசாரின் அறிவுரைக்கிணங்க பாதயாத்திரையை கைவிட்டு பின்னர் ஆறாம்நாள் ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகை அம்மனாலயத்திலிருந்து 16அடியார்களுடன் ஜூன் 8ஆம் திகதி புறப்பட்டோம்.
இன்று 28நாட்களின் பின்னர் நாம் என்றும் நேசிக்கும் புனிதபதியாகிய காரைதீவு மண்ணை வந்தடைந்தோம்.
வரும்வழியில் பிரதேசம்பிரதேசமாக பொலிசார் தேவையான வழிகாட்டல்களையும் உதவிகளையும் செய்தனர். சிலவேளைகளில் உணவுபானங்களையும் வழங்கினர்.
சுகாதார போசாக்கு அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்ற 50பேர் பங்குபற்றக்கூடிய அனுமதியும் எம்மிடமுள்ளது. இதைவிட முருகப்பெருமானின் அருளும் உள்ளது. அவனது வழிகாட்டலில் நாம் கதிர்காமத்தை சென்றடைவோம். என்றனர்.
இம்முறை உகந்தயில் காட்டுப்பாதை திறப்பதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளதே. எனின் எவ்வாறு காட்டுக்குள்ளால் பயணிப்பீர்கள்? என எமது நிருபர் கேட்டதற்கு 'அவனருளால்தான் அவன்தாள் வணங்கமுடியும்.அவனின்றி அணுவும் அசையாது. நல்லது நடக்கும். அவனருளால்தான் இத்தனைகாததூரம் நடந்து வந்துள்ளோம்.அதேபோல் அந்தக்காட்டுப்பாதையும் திறக்கும் அதனூடாகவே நாம் பயணிப்போம் என பெரிதும் நம்புகிறோம்' என்றனர்.
No comments:
Post a Comment