அரசாங்கங்கள் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கத் தவறினால், கொரோனா வைரஸ் தொற்று மிக மோசமான நிலையை எட்டுமென உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.
பெரும்பாலான நாடுகள் தௌிவான முடிவுகளை எடுக்காமல் செயற்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் ரெட்ரொஸ் அதனம் கெப்ரியஸிஸ் (Tedros Adhanom Ghebreyesus) தெரிவித்துள்ளார்.
தகுந்த நடவடிக்கைகள் பின்பற்றப்படாத நாடுகளில் தொற்றின் வேகம் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் மக்களின் முதல் எதிரியாகவுள்ளதாகவும் எனினும் பல அரசுகள் மற்றும் மக்களின் நடவடிக்கை இதனை பிரதிபலிப்பதாக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச தலைவர்கள் மாற்றி மாற்றி பேசுவதால், கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளில் மக்கள் நம்பிக்கை இழப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
எந்த தலைவர், எந்த நாடு என அவர் வெளிப்படையாக குறிப்பிடவில்லை என்றாலும், அவரது குறிப்புகள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் தொற்று விவகாரத்தை சரியாக கையாளவில்லை என விமர்சிக்கப்படும் ஏனைய உலகத் தலைவர்களைக் குறிப்பதாக இருக்கலாமென அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவில் தொற்றின் வேகம் மிகவும் மோசமாக அதிகரித்துள்ளதுடன், சுகாதார நிபுணர்கள் மற்றும் அமெரிக்க ஜனாதிபதிக்கு இடையில் கருத்து முரண்பாடு அதரிகரித்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் 13,236,249 பேர் கொரொனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 575,540 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் கொரோனா தொற்றுக்குள்ளான சுமார் 1 மில்லியன் பேர் பதிவானமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதனிடையே, இந்தியாவில் இதுவரை 907,645 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதோடு 23,727 பேர் உயிரிழந்துள்ளனர்.
No comments:
Post a Comment