நேற்று 13.07.2020 ஆம் திகதி நடைபெற்ற நாவிதன்வெளி பிரதேசசபையின் மாதாந்த சபை அமர்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெண் உறுப்பினரான நாகேந்திரன் தர்சினி அவர்கள் தற்போது பதில் தவிசாளராக கடமையாற்றும் அப்துல் சமட் என்பவருக்கு எதிராகவே கடும் கண்டணத்தை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்
மத்தியமுகாம் - 02 வட்டாரத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட எனக்கு மக்களின் தேவையின் பொருட்டு பதில் தவிசாளராக கடமையாற்றும் சமட் அவர்களை அணுகி மக்களின் தேவைகளை முன்வைக்கும் போது அத்தேவை தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருவது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும் என்பதுடன் இவ்வட்டார மக்களின் ஒட்டுமொத்த அபிலாசைகளையும் புறக்கணிக்கும் நடவடிக்கையாகும்.
அத்துடன் சபை அமர்வில் என்னால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை தனது கட்சி ஆதரவாளர்களுடன் வெளி இடங்களில் கதைத்து எள்ளி நகையாடும் செயற்பாடும் நடைபெற்று வருவதாக ஆதாரத்துடன் எனக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. இது தொடர்பாக அவரிடம் வினவியபோது நான் ஜனாதிபதியின் பிரதிநிதி என்னிடம் யாரும் ஒன்றும் கதைக்கமுடியாது அதிகாரம் என்னிடமுள்ளது என்று தொடர்ச்சியாக இவ் வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தி வருகின்றார்.
இவ்வாறான பொறுப்பற்ற வார்த்தை பிரயோகங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட எமக்கு மிகவும் மன அழுத்தத்தைக் கொடுக்கின்றது. இவ்வாறு பொறுப்புணர்வின்றி செயற்படும் பதில் தவிசாளர் மீது சபை ஒழுக்காற்று நடவடிக்கை மேற் கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
No comments:
Post a Comment