இந்த நாட்டில் தமிழ்பேசும் மக்களது உரிமைகள் பற்றி தேர்தல் காலத்தில் மட்டுமல்லாது என்றும் பேசிவருவது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மாத்திரமே. எனவேதான் தமிழ்மக்கள் தமதுஏகப்பிரதிநதிகளாக எம்மை தொடர்ந்து ஆதரித்துவருகின்றனர்.
இவ்வாறு அம்பாறை மாவட்ட த.தே.கூட்டமைப்பு பிரதிநிதிகளுடனான சந்திப்பில் இ.த.அரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
இச்சந்திப்பு மட்டக்களப்பு அமெரிக்க மிசன் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
சந்திப்பில் த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையிலான குழுவில் த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களான எஸ்.கணேஸ் த.கலையரசன் மற்றும் இளைஞரணித்துணைத்தலைவர் அருள்.நிதான்சன் துஸி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
அங்கு எதிர்வரும் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் த.தே.கூட்டமைப்பு எவ்வாறு சிறப்பு வியுகங்களை வகுத்து தேர்தலை சுகாதார வழிகாட்டல்களுடன் முன்கொண்டுசெல்லவேண்டும் என்பது பற்றி கலந்துரையாடப்பட்டது.
அங்கு மாவை சேனாதிராஜா மேலும் கூறுகையில்:
ஏனைய சமுக இளைஞர்களைப்போல் தமிழ் இளைஞர்களையும் கூடுதலாக தேர்தலில் ஆர்வத்துடன் பங்குபற்றச்செய்யவேண்டும். அதற்காகவே இம்முறை அம்பாறை வேட்பாளர்களுள் பலரை இளைஞர்களாக இடம்பெறவைத்துள்ளோம்.எனவே ஜனநாயகவழியில் இளைஞர்களை வழிப்படுத்தி தேர்தலில் ஈடுபடுத்தவேண்டும்.
எதிர்வரும் தேர்தல் சவால்மிகுந்ததென்றாலும் அம்பாறை மாவட்டத்தில் நாம் எமது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ளவேண்டுமாகவிருந்தால் எமது ஆசனத்தைப் பெற்றேஆகவேண்டும். அதற்கு எமது கட்சி மாத்திரமல்ல தமிழ்மக்களும் தயாராகவேண்டும்.எமது தமிழ்மக்களின் நியாயமான உரிமைகளை பெறவேண்டும் என்பதற்காக நாம் எப்போதும் பேசிவருகிறோம். ஜ.நா. வரை குரல் கொடுத்துவருகிறோம். தேர்தலுக்காக அவ்வப்போது இறங்கும் சிறுகுழுக்கள் கூட இறுதியில் எம்மிடமே அப்பணியை விட்டுவைக்கின்றன. அரசும் சரி சர்வதேசமும் சரி பேசவேண்டுமானால் அது த.தே.கூட்டமைப்புடன் மட்டுமே என்ற தத்துவம் உணரப்பட்டுள்ளது.
எனவே அதையுணர்ந்து அம்பாறை மாவட்ட தமிழ்மக்கள் தேவையற்ற சலசலப்பிற்கு அஞ்சாது ஒரேகுடையின்கீழ் த.தே.கூட்டமைப்புடன் பயணிக்கவேண்டும். எதிர்வரும் காலங்கள் மிகவும் முக்கியமானவையாகும்.எமது வரலாற்றை உலகறியும். இளைஞர்கள் அதில் பெரும்பங்கு வகித்துவந்துள்ளனர். போராட்டத்தினூடே நாம் எமது வலிமையைகாட்டியுள்ளோம். எனவே இளைஞர்களை ஜனநாயகவழியில் பயன்படுத்தி தேர்தலில் கூடுதலாகப்பங்குபற்றச் செய்யவேண்டும்.
அதேவேளை பழையவர்களையும் மறக்காது அவர்களையும் அரவணைத்துச்செல்லவேண்டும். நாம் ஒன்றிணைந்து இயங்கவேண்டும். வேட்பாளர்களிடையே விருப்புவாக்குப்போட்டி இருக்கலாம். அதற்காக எமக்குள் முட்டிமோதி கட்சியின் செல்வாக்கை இழந்துவிடக்கூடாது.
அனைவரும் ஒன்றிணைந்து ஜனநாயகமுறைப்படி மக்களை அணுகி தேர்தலை அணுகுங்கள். கட்சியை முதன்மைப்படுத்தி வாக்கு கேளுங்கள். மக்கள் மனங்களில் நிற்பது த.தே.கூட்டமைப்பு மட்டுமே என்பதை உலகறியும்.
எனவே அம்பாறை மாவட்டத்திற்குரிய பிரநிதித்துவத்தை பெற தமிழ்மக்கள் குறிப்பாக இளைஞர்கள் ஒன்றிணைந்து தேர்தலில் கூடுதலாக பங்கேற்று வாக்களிக்கவேண்டும். அதற்காக கட்சித்ததொண்டர்களாகிய நீங்கள் சிறுசிறுபேதங்களை மறந்து ஒற்றுமையாக செயற்படவேண்டும் என்றார்.
சந்திப்பின்போது மட்.மாவட்ட வேட்பாளர் ஞா.சிறிநேசனும் சமுகமாகியிருந்தார்.
No comments:
Post a Comment