புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏழு வயதுச் சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஏம்பல் கிராமத்தில் வசித்து வருபவரின் ஏழு வயது மகள் கடந்த புதன்கிழமையன்று மதியம் காணாமல் போனார்.
இது குறித்து ஏம்பல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதற்குப் பின் நடந்த தேடுதலில் கிளவிதம் ஊரணி பகுதியில் புதர்களுக்கிடையில் சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையை அடுத்து, சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான 29 வயதுடைய ராஜா என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சிறுமி அப்பகுதி வழியே செல்லும்போது அவரை தூக்கிச்சென்று பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதாகவும் சிறுமி கத்தி கூச்சலிட்டதால் ராஜா அந்தக் குழந்தையை அடித்துக் கொன்றதாகவும் தெரிகிறது.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இது தொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, "இக்கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். "கொரோனா பரவலைப் போலவே தமிழகத்தில் சட்டம் - ஒழுங்குச் சீர்கேடும் படுவேகமாகப் பரவிவருவது கவலையடைச் செய்கிறது. சில வாரங்களுக்கு முன்புதான், இதே புதுக்கோட்டை மாவட்டத்தில் மற்றொரு சிறுமி படுகொலைக்குள்ளானது தாமதமாக வெளியே தெரியவந்தது. இப்போது மீண்டும் ஒரு சிறுமி. இத்தகைய சம்பவங்கள் தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது" என்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
இது தொடர்பான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்துவருகின்றனர். தற்போது இந்திய அளவில் இந்த சம்பவம் தொடர்பான ஹாஷ்டாக் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், புதுக்கோட்டையில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு, முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ஐந்து லட்ச ரூபாய் நிதியுதவி அளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையைப் பெற்றுத்தர துரித நடவடிக்கை எடுக்கும்படி தான் உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment