யாழில் தேனீக்கள் கிராமம் உருவாகிறது: சுற்றுச்சூழல் தினத்தில் கவனத்தை ஈர்த்த நிகழ்வு

தமிழ்த்தேசிய பசுமை இயக்கம் உலக சுற்றுச்சூழல் தினத்தையும், உலக தேனீக்கள் தினத்தையும் முன்னிட்டு முன்னெடுத்துள்ள தேனீக்கள் கிராமம் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நேற்று செவ்வாய்க்கிழமை(05-06-2018) கோண்டாவிலில் கோலாகலமாக நிகழ்ந்தேறியது.

மகரந்தங்களைக் காவுவதன் மூலம் இயற்கைச் சூழலுக்கும், விவசாயத்துக்கும் பாரிய பங்களிப்பைச் செய்துவருகின்ற தேனீக்கள், விவசாய இரசாயனங்களினாலும் நகரமயமாக்கலினாலும் எண்ணிக்கையில் வீழ்ச்சி அடைந்து வருகின்றன.

இதனைக் கருத்தில் கொண்டு தேனீக்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தேனீ வளர்ப்பின் மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தேனீக் கிராமம் என்ற திட்டத்தை முன்னெடுத்துள்ளது. முதலாவது கிராமமாகக் கோண்டாவில் தெரிவுசெய்யப்பட்டு, முதற்கட்டமாக தெரிவுசெய்யப்பட்டஐம்பது பயனாளிகளுக்கு தேனீப்பெட்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கோண்டாவில் இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் பிரதமவிருந்தினராகக் கலந்துகொண்டு தேனீப்பெட்டிகளை வழங்கிவைத்துள்ளார்.


தமிழ்த்தேசியப் பசுமை இயக்கததின் தலைவர் சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் க.சிவநேசன் சிறப்பு விருந்தினராகவும், வைத்தியகலாநிதி சிவன்சுதன், பேராசிரியர் சோ.கிருஸ்ணராசா, சட்டத்தரணி தி.அர்ச்சுனா ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.
இணுவையூர் ரசிகப்பிரிய சபா கலை வளர்ச்சி மன்றத்தினரதும், யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மாணவிகளினதும் நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றன.

தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு விரைவில் தேனீ வளர்ப்புப் பற்றிய பயிற்சிகள் வழங்கப்படும் என்றும், பயிற்சியின் பின்னர் அவர்கள் அனைவருக்கும் தேனீக்குடியிருப்புகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் முதலமைச்சர் உரையாற்றும்போது-“ஒவ்வொரு வருடத்தினதும் ஜூன் ஐந்தாம் நாள் சர்வதேச சுற்றாடல் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு சூழலுடன் தொடர்புடைய பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று காலை யாழ் மாநகரசபை உறுப்பினர்களினாலும் யாழ் பிரதேச செயலகம், நகர அபிவிருத்தி அதிகாரசபை, எமது விவசாய அமைச்சு என அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுத்த மரம் நடுகை நிகழ்வில் நானும் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தேன்.

தற்போது சுற்றுச் சூழலுடன் தொடர்புடைய இந்த “தேனீக்கிராமம்” தொடக்க நிகழ்ச்சியில் பங்குபற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.
ஒவ்வொரு வருடத்தைய மே 20 ஆம் திகதியானது உலக தேனீக்கள் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. உலக தேனீக்கள் தினம் என்ற நிகழ்வு எமக்கு பரீட்சயமல்லாத ஒரு நிகழ்வாகக்கூட கொள்ளப்படலாம்.

தேனீக்களுக்கு என்ன அவ்வளவு விசேடம் என எம்மில் பலர் கேள்வி கேட்கக் கூடும். சூழல் எமக்கு வழங்கியுள்ள பழங்களையும் காய் கனிகளையும் எமக்குக் கிடைக்கச் செய்வதற்கு தேனீக்கள் பெரும்பங்காற்றி வருகின்றன. இக் கனிகள் உருவாவதற்கு தேவையான மகரந்தங்களைக் காவிச் சென்று குறிகளில் சேர்க்கின்ற பணியை இத் தேனீக்கள் மேற்கொள்கின்றன என்ற விடயம் எமக்கு புதிதாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. தேனீ என்றவுடன் அதன் எதிர்மறையான செயற்பாடே எமக்கு நினைவுக்கு வரும். தேனீக்கள் எம்மைக் கொட்டி விடும். பின்னர் மருந்து தடவித்தான் அந்த வலியைப் போக்க வேண்டும் என்று நாம் எண்ணுவோம். ஆனால் இந்தத் தேனீக்களை முறையாக கவனமாக கையாண்டால் அவற்றிலிருந்து எமக்கு அதிக பலன்கள் கிடைக்கப் பெறுவன. சுவையானதும் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக்கூடியதுமான தேன் எமக்குக் கிடைக்கின்றது. அதே போன்று சுவையான பழங்கள் எமக்குக் கிடைப்பதற்கு இத் தேனீக்கள் காரணமாக இருக்கின்றன. அவை கோபமடைந்தால்த்தான் கொட்டுவன. இல்லை என்றால் மிகவும் சாதுவான உயிரினங்கள் அவை.

தேனீக்கள் வாழ்க்கை முறைமை மனித இனத்திற்கு ஒரு படிப்பினையாகக்கூடக் கொள்ளப்படலாம். இராணித் தேனீக்கள், ஆண் தேனீக்கள், வேலைக்காரத் தேனீக்கள் என பல வகையான தேனீக்கள் ஒரு கூட்டத்தில் இருப்பன. இராணித் தேனீ அக் கூட்டத்தின் தலைமை தாங்குகின்ற தேனீயாகவும் ஆண் தேனீக்கள் இனப்பெருக்கச் செயற்பாட்டில் ஈடுபடுபவர்களாகவும் வேலைக்காரத் தேனீக்கள் தொழிலாளர்களாகவும் இயங்குகின்றன.

இயற்கையாகவே சூழலை நேசிக்குந் தன்மையைக் கொண்டவர் கௌரவ பொ.ஐங்கரநேசன் அவர்கள், கடந்த வருடம் ஆளுக்கொரு மரம் நடுவோம் நாளுக்கொரு வரம் பெறுவோம் என்ற தொனிப் பொருளில் உலக சுற்றுச் சூழல் தின நிகழ்வுகளைத் தனியொருவராக அவர் முன்னெடுத்திருந்தார்.

அவர் அச்சமயத்தில் விவசாய அமைச்சர் பதவியிலிருந்து விலகியிருந்த நிலையிலும் அவரது உலக சுற்றுச் சூழல் தின நிகழ்வுகள் மிகச்சிறப்பு வாய்ந்தவையாக அமைந்திருந்தன. அதே போன்று இந்த வருடமும் தேனீக்கள் தொடர்பான ஒரு விழிப்புணர்வை பொதுமக்களுக்கிடையே ஏற்படுத்தும் நோக்கோடு “தேனீக்கிராமம்” என்ற இந்த திட்டத்தை பொதுமக்கள் மத்தியில் அறிமுகம் செய்ய முன்வந்துள்ளார்.

இத்திட்டத்தின் முதலாவது கிராமமாக கோண்டாவில் கிராமத்தைத் தெரிவு செய்து இப்பகுதியில் வாழும் ஐம்பது நபர்கள் ஒவ்வொருவருக்கும் தேனீப் பெட்டிகளும் தேனீக்களும் வழங்கப்படவிருக்கின்றன என எனக்கு அறியத்தரப்பட்டுள்ளது.
அவர்களுள் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள், யுவதிகள் ஆவர். தேனீவளர்ப்பு முறையாக மேற்கொள்ளப்படின் அது ஒரு இலாபகரமான தொழில் முயற்சியாக அமையும்.தேனீக்கள் சிறப்பாக வளர்க்கப்படும் போது அப்பகுதியிலுள்ள பழ மரங்களும் கூடுதலான கனிகளை எமக்கு வழங்குவன. எனவே இந்த முயற்சியானது பராமரிப்புச் செலவுகள் குறைந்த ஒரு தொழில் முயற்சியாக இருக்கின்றமையால் இவற்றை மாணவர்களும் சிறப்பாக முன்னெடுக்க முடியும் என எண்ணுகின்றேன்.
வீட்டுத்தோட்டங்களுடன் தேனி வளர்ப்பும் எமது இளைய சமுதாயத்தினரிடையே செல்வாக்குப் பெறவேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.

சுற்றுப்புறச்சூழல் மாசடைவதன் மூலம் இயற்கை வளங்களான நீர்நிலைகள், வனப்பகுதிகள், வனஜீவராசிகள், பறவையினம், கடல்வாழ் உயிரினங்கள், தாவரங்கள் ஆகிய அனைத்தும் பாதிக்கப்படுகின்றன. அவை நல்வாழ்வு கிடைக்கப்பெற வேண்டுமாயின் சுற்றுப்புறச் சூழலின் சமநிலை பாதுகாக்கப்பட வேண்டும். இச்சமநிலையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் சுற்றுச் சூழலை மட்டுமன்றி உயிரினங்களின் நல்வாழ்வுக்கும் அச்சுறுத்தல்களைஏற்படுத்துகின்றன. நவீன விஞ்ஞானம், தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக கைத்தொழிற்துறை மேம்பட்டுள்ள போதும் சூழல் மாசடையுந் தன்மையும் அந்த அளவிற்கு அதிகரித்துள்ளது. இரசாயனக் கழிவுகள் நீர்நிலைகளை மாசுபடச் செய்வதால் உயிரினங்களுக்கு பெரும் ஆபத்தாக அது அமைகின்றது. மனிதன் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கக் கடமைப் பட்டவன். அவன் இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு அங்கம். ஆறறிவு பெற்றவன். ஆகவே சூழல் பாதுகாப்பு அவனின் முக்கிய கடப்பாடுகளில் ஒன்றாகும். மனிதன் நினைத்தவாறு உலகை அனுபவிக்கும் உரிமையைக் கொண்டவனல்ல.

சுற்றுச் சூழலைப் பாதுகாக்கத் தவறியதன் விளைவுகளை மனித குலம் இப்போது தாராளமாக அனுபவிக்கத் தொடங்கிவிட்டது. உலக வெப்பமயமாதல், ஓசோன் படலத்தில் துவாரங்கள் ஏற்பட்டுள்ளமையால் சூரிய புறஊதாக் கதிர் தாக்கங்களின் அளவு அதிகரித்துள்ளது. விளைவுகளாக நோய்ச் செறிவுகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் மேற்குலகில் சூழலியல் செயற்பாடுகள் அரசியலின் முக்கியமானதொரு அம்சமாக மாறியுள்ள காரணத்தினால் பசுமைக் கட்சிகள் பல தோற்றம் பெற்றுள்ளன. அவை பாராளுமன்ற ஆசனங்களையும் கைப்பற்றி மனிதனுக்கும் சுற்றுப்புறச் சூழலுக்கும் இடையிலான பிணைப்புப் பற்றி மக்கள் மத்தியில் கூடுதல் விழிப்புணர்வை உருவாக்குவதற்கு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
அந்த வகையிலேயே தமிழ்த் தேசியப் பசுமை இயக்கமும் சூழலியல் தொடர்பான பல விடயங்களை பொதுமக்களுக்கு நாளும் எடுத்துக்கூறிவருகின்றது. மக்கள் வாழ்வில் தேனீக்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து தேனீ வளர்ப்பை மக்கள் செல்வாக்குடன் முன் நடத்த தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. சென்ற வருடம் அரசாங்கத்தால் தேனி வளர்ப்பு செயலூக்க நிகழ்வுகள் முடுக்கி விடப்பட்டிருந்தன.

எமது சுதேச வைத்தியத்தில் தேன் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. நல்ல தேன் இலங்கையில் கிடைக்காததால் மேற்படி செயலூக்கம் மூலம் தேனி வளர்ப்பாளர்களுக்குப் போதிய பயிற்சிகள் அளித்து தேனி வளர்ப்பை ஒரு தொழிலாக இளைஞர் யுவதிகளிடையே அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. தனது செயலூக்கத் திட்டத்தால் அறுபது தொன் தேனையும் நூறு மில்லியன் டொலர்கள் அந்நிய செலாவணியைப் பெறவும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. ஆகவே தேனி வளர்ப்பாளர்கள் அரசாங்கம் தரும் அனுசரணைகளைப் பெற்று நன்மை பெறவேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.

தொடர்ச்சியான நீண்டகால போரின் விளைவாக பல இன்னல்களுக்கு மத்தியில் வீடு வாசல்களை இழந்து தோட்டம் துரவுகளை இழந்து உறவுகளைத் தொலைத்துவிட்டு தொழில் முயற்சியின்றி வாடிக்கொண்டிருக்கின்றார்கள்எம் மக்கள். அவர்களுக்கான உதவிகளை வழங்க ஆக்கபூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளாத நிலையில் மக்கள் தம்மிடையே வேலிச்சண்டை, எல்லைச்சண்டை, அரசியல் வாக்குவாதங்கள் என தற்போது பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்றார்கள். ஒற்றுமையைத் தொலைத்துவிட்ட நிலையில் நாம் உள்ளோம். எமது நிலங்களை எமது தொழில்முயற்சிகளை எமக்குக் கிடைக்கவேண்டிய உரித்துக்களை கிடைக்காமல் செய்வதற்கும் கபளீகரம் செய்வதற்கும் பலருக்கும் வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். எனவே எம்மிடையே காணப்படுகின்ற அரசியல் கருத்து வேற்றுமைகள், பாகுபாடுகள் எமது மக்களின் எதிர்கால வளர்ச்சிக்கு, அவர்களின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு இடையூறாக அமைந்துவிடாதபடி நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கொருவழி மனதிற்குப் பிடித்தமானபொழுது போக்குகளில் ஈடுபடுவது. அப்பொழுதுபோக்கு போதிய வருவாயையும் ஏற்படுத்தும் என்றால் விருப்புடன் நாம் அச் செயற்பாடுகளில் ஈடுபடலாம். தேனி வளர்ப்பும் அவ்வாறானதொரு பொருளாதார மேம்பாட்டைத் தரக்கூடிய பொழுது போக்கு என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

தேனி வளர்ப்பை எம் இளைஞர்கள் யுவதிகள் மத்தியில் பிரபல்யமடையச் செய்ய பசுமை இயக்கம் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. கௌரவ ஐங்கரநேசன் அவர்களின் பசுமை இயக்க எதிர்கால செயற்பாடுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வாழ்த்துகின்றேன். மக்கள் மத்தியில் சூழல் தொடர்பான நல்ல பல கருத்துக்களை எடுத்துச் செல்வதற்கு அவரின் இவ்வியக்கம் ஒரு கருவியாக இருக்க வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்“ என குறிப்பிட்டார்.

be 2

be 2

be 2

be 2

be 2

be 2

be 2

be 2

be 2

be 2

be 2

be 2

be 2

be 2

be 2

be 2

be 2

be 2

be 2

be 2

be 2

be 2

(பாறுக் ஷிஹான்)

அதிகம் வாசித்தவை

 • Aug 13 , 2017

  அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

 • Apr 16 , 2018

  விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

 • Apr 25 , 2018

  12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

 • Apr 18 , 2018

  2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.

 • May 12 , 2018

  இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.