காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலய நிருவாகத்திற்கெதிராக ஆர்ப்பாட்டம்

வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலய நிருவாகத்திற்கெதிராக இன்று (7) ஞாயிற்றுக்கிழமை காலை ஆலய சந்தானத்தினர் திரண்டுவந்து ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தினர்.

ஆலய நிருவாகத்தினரின் நிருவாகச்சீர்கேடு ஊழல் நிதிமோசடி சர்வாதிகாரப்போக்கு கூட்டத்திற்கு பெண்களை வரவேண்டாமென்று அறிவித்தமை கணக்கறிக்கை காட்டாமை கணக்காய்வுக்கு இடமளிக்காமை பிரதேசசெயலரின் நீதியான செயற்பாட்டிற்கு இடமளிக்காமை தான்தோன்றித்தனமான போக்கு என்பவற்றை சுட்டிக்காட்டி பல சுலோகங்களுடன் சேனாதிராச சந்தானத்தின் ஆண்பெண் இருபாலாரும் இந்த சத்தியாக்கிரக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஆலயத்திற்கு வெளியே பிரதானவீதியோரத்தில் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. பலநூற்றாண்டுகளுக்கு முன் அதாவது கி.பி.12ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற இத்தாய் ஆலயத்தின் நிருவாகத்திற்கெதிராக இவ்வாறு பகிரங்கமாக அதே சந்தானத்தவர் பதாகைகள்தூக்கி பல குற்றச்சாட்டுக்களைச்சுமத்தி ஆர்ப்பாட்டத்திலீடுபட்டது இதுவே முதற் தடவையாகும்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் 'எங்கே எங்கள் சந்தானப் பணம்? ஊழல் நிருவாகமே உடனடியாக வெளியேறு! சந்தானத்தைப்பிரிக்காதே! பெயின்ற் பண்ண 16லட்சமா? பிறஸ் வாங்க 5லட்சமா? உள்ளக கணக்காய்வை தடைசெய்தது ஏன்? ஆலய சேமிப்புக்கணக்கிலும் கையாடலா? தாயின் கோயிலில் தாய்மார்க்குத் தடையா? ஆளுக்கொரு சட்டமா? அரசஅதிபரே ஆலய சர்வாதிகாரத்தை அடக்கு! பிரதேசசெயலரே உங்களுக்குஎமது பூரணஆதரவு! 'இவ்வாறு பல சுலோகங்களடங்கிய பதாதைகளை அவர்கள் பிடித்திருந்தனர்.

ஆலயசந்தானத்தவர் சார்பில் படவரைஞர் சா.கனகசபேசன் பிரதமபொறியியலாளர் ப.இராஜமோகன் ஓய்வநிலை அதிபர் வே.கிருஸ்ணபிள்ளை நிலஅளவை அத்தியட்சகர் க.தட்சணாமூர்த்தி தொழினுட்ப உத்தியோகத்தர் மு.இரவீந்திரன் சிறைச்சாலை உத்தியோகத்தர் க.ஜெயகணேஸ் ஆசிரியை திருமதி சுதர்சினி பத்மநாதன் உள்ளிட்டோர் ஊடகங்களுக்கு கருத்துக்களைத் தெரிவித்தனர்.

அவர்களது கருத்துக்களின்படி தெரியவருவதாவது:
ஆலயத்தில் நிலவும் நிர்வாகச்சீர்கேடு நிதிஊழல் என்பவற்றை சுட்டிக்காட்டி ஆலய சந்தானத்தினர் சிலர் காரைதீவு பிரதேசசெயலாளருக்கு முறைப்பாடொன்றை சமர்ப்பித்திருந்தனர்.
அதன்படி அவர் 3 தர்மகர்தாக்களுக்கும் இது தொடர்பாக அறிவித்தார். வைகாசிப்பொங்கல் நடைபெற்று 21 நாட்களுள் தாம் பொதுச்சபைக்கூட்டத்தைக் கூட்டுவதாக தர்மகர்த்தாக்கள் பிரதேசசெயலருக்கு பதிலளித்திருந்தனர்.

ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் கூட்டப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி மீண்டும் சந்தானத்தினர் பிரதேசசெயலருக்கு மனுச்செய்தனர்.
அவர் இருசாராரையும் அழைத்து சமரசமாகத் தீர்த்துவைக்கும்நோக்கில் எதிர்வரும் 13ஆம் திகதி பிரதேசசெயலகத்தில் சமரசக்கூட்டமொன்றை நடாத்தவிருப்தாக இருசாராருக்கும் அறிவித்தல் கொடுத்தார்.

எனினும் ஆலய நிருவாகம் அதற்குமாறாக இன்று (7) ஞாயிற்றுக்கிழமை பொதுச்சபைக் கூட்டத்தைக் கூட்டவிருப்பதாக ஊர்பூராக ஒலிபெருக்கிவாயிலாக வெளளியன்று இரவு அறிவித்தல் செய்தனர்.
இதனையறிந்து பிரதேச செயலகத்தால் சனியன்று இரவு 7மணியளவில் தனக்குரிய அதிகாரத்தை தெளிவுபடுத்தி இன்றைய கூட்டம்செல்லுபடியற்றது. எனவே 13ஆம் திகதிக்கூட்டத்திற்கு வருமாறு இருசாராருக்கும் ஊர்பூராக ஒலிபரப்புச்செய்யப்பட்டது.

இரு மணிநேரத்துள் மீண்டும் ஆலயநிருவாகம் தீர்மானிக்கப்பட்ட பொதுச்சபைக்கூட்டம் கட்டாயம் திட்டமிட்டபடி நடைபெறும்.அனைத்து சந்தானத்தவரையும் கலந்துகொள்ளும்படி பொதுவான அறிவித்தலை ஊர்பூராக அறிவித்திருந்தது.
இவ்வாறான அறிவித்தல்கள் மூலம் சந்தானத்தவர் குழப்பமடைந்தனர்.
பிரதேசசெயலாளரின் செயற்பாட்டிற்கு மதிப்பளிக்காது தன்னிச்சையாக கூட்டம் கூடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சந்தானத்தவர் இன்று (7) ஞாயிற்றுக்கிழமை காலை ஆலயத்திற்கு வெளியில் வீதியோரத்தில் ஆர்ப்பாட்டப் போராட்டமொன்றை நடாத்தினர்.

அதேவேளை ஆலயத்தினுள் நிருவாகசபையினர் சுமார் 30பேரடங்கிய குழுவினருடன் பொதுச்சபைக்கூட்டத்தை நடாத்தினர்.

வெளியில் ஆர்ப்பாட்டம் உள்ளே கூட்டம். இந்த நிலையில் இரண்டும் இன்று பகல் 11மணியளவில் நிறைவுக்கு வந்துள்ளன.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகையில்: உடனடியாக 5வருட கணக்கறிக்கையை பகிரங்கமாக சந்தானத்துக்கூட்டத்தில் காண்பிக்கவேண்டும். ஊழலுக்கு பேர் போன தற்போதைய நிருவாக சபையைக் கலைத்துவிட்டு புதிய நிருவாகசபை தெரியவேண்டும். பெண்களும் நிருவாகசபையில் அங்கம்வகிக்கவேண்டும். அராஜக சர்வாதிகாரப்போக்கை நிறுத்தவேண்டும். கணக்காய்வுக்கு கணக்கறிக்கை உட்படுத்தப்படவேண்டும். திருத்தப்பட்ட யாப்பை பகிரங்கமாக வெளியிடவேண்டும். பிரதேசசெயலரின் நல்ல செயறபாட்டிற்கு பூரணஆதவளிப்போம். நீதிமன்றிற்கு ஆலயத்தைக்கொண்டு செல்ல நாம் ஒருபோதும் விரும்பவில்லை. ஆலயப்பிச்சினை ஆலயத்திற்குள்தான் தீர்க்கப்படவேண்டும். என்று குறிப்பிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தை ஊர்ப்பொதுமக்கள் வேடிக்கை பார்த்திருந்ததைக் காணக்கூடியதாயிருந்தது.

k 2

k 2

k 2

k 2

k 2

k 2

k 2

k 2

k 2

k 2

(காரைதீவு சகா)

அதிகம் வாசித்தவை

 • Aug 13 , 2017

  அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

 • Apr 16 , 2018

  விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

 • Apr 25 , 2018

  12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

 • Apr 18 , 2018

  2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.

 • May 12 , 2018

  இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.