அம்பாறையில் மாட்டுப்பளை பகுதியில் சிதைந்து கிடப்பது சோழர் கால ஆலயமா?

இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.

மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்திலிருந்து மேற்குப் புறமாக, சுமார் 100மீ தொலைவில் சிதைந்த நிலையில் கட்டடப் பகுதியொன்று காணப்படுகிறது.

மிக நீண்ட காலமாக சிதைந்த நிலையில் இந்தக் கட்டடப் பகுதி இங்கு காணப்படுகின்ற போதும், தற்போதுதான் இதன் புராதனத் தன்மை குறித்த பேச்சுக்கள் வெகுவாக எழுந்துள்ளன.

சிதைந்த இந்தக் கட்டடம் செங்கற்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த செங்கற்கள், சோழர்களின் ஆட்சியின்போது பொலனறுவையில் இந்து ஆலயங்களை நிர்மாணிப்பதற்குப் பயன்படுத்திய செங்கற்களுக்கு ஒப்பானவையாக இருக்கின்றன என்று, ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத் தலைவர் கோ. கமலநாதன் கூறுகின்றார்.

 101253678 kovil 12

 

இலங்கையின் பொலனறுவை பிரதேசத்தைத் தலைநகராகக் கொண்டு, 11ஆம் நூற்றாண்டில் சோழர்களின் ஆட்சி நிலவியமை குறிப்பிடத்தக்கது.

இருந்த போதும், மாட்டுப்பளை மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் இந்த கட்டடத்தின் வரலாறு தொடர்பில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் எவரும் இதுவரையில் கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 101253618 kovil 03

"எனது பதினைந்து வயதில் சிதைந்த இந்தக் கட்டடத்தை நான் கண்டிருக்கின்றேன். இந்தக் கட்டடத்தைச் சுற்றிலும் அப்போது காடு வளர்ந்திருந்தது. எனவே, கட்டடப்பகுதிக்குள் அநேகமாக யாரும் அப்போது போவதில்லை. மேலும், இப்போது இந்தக் கட்டடம் இருப்பதை விடவும் அப்போது உயரமாக இருந்தது" என்கிறார் ஓய்வு பெற்ற அதிபர் வி. ஜெயநாதன். இவருக்கு இப்போது 75 வயதாகிறது. ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்தின் முன்னாள் தலைவரான இவர் - அம்பாறை மாவட்டத்திலுள்ள காரைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

புராதன ஆலயமொன்றின் எஞ்சிய பகுதி என நம்பப்படும் இந்தக் கட்டடத்திலுள்ள செங்கற்கள், இப்போது இப்பிராந்தியத்தில் புழக்கத்திலுள்ள சாதாரண செங்கற்களை விடவும் பெரியவையாகக் காணப்படுகின்றன.

சிதைந்த கட்டடப் பகுதிலுள்ள செங்கல் ஒன்றின் நீளம் 28 சென்டி மீட்டர்களாக உள்ளது. அகலம் 13.5 சென்டி மீட்டர்களாகவும் , உயரம் 5.5 செ.மீட்டர்களாகவும் உள்ளன.

 101253622 kovil 05

ஆனால், தற்போது இப்பகுதியில் புழக்கத்திலுள்ள சாதாரண செங்கல் ஒன்றின் நீளம் 21 சென்றி மீற்றர்களாகவும், அகலம் 09 சென்டி மீட்டர்களாகவும், உயரம் 6.5 சென்டி மீட்டர்களாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, குறித்த கட்டடச் சிதைவுக்கு அருகில் பள்ளமான ஒரு இடமும் காணப்படுகிறது. இது சிதைந்த நிலையில் காணப்படும் புராதன ஆலயத்துக்குரிய தீர்த்தக் கரையாக இருக்கலாம் எனவும் இங்குள்ளவர்கள் நம்புகின்றனர்.

 101253624 vettiveljeyanathan 011

இந்த நிலையில், மேற்படி சிதைந்த கட்டடத்திலிருந்து எடுக்கப்பட்ட செங்கல் ஒன்று, அருகிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்குக் கொண்டு வரப்பட்டு, அண்மையில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை

 • Aug 13 , 2017

  அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

 • Apr 16 , 2018

  விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

 • Apr 25 , 2018

  12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

 • Apr 18 , 2018

  2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.

 • May 12 , 2018

  இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.